சென்னை: ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தை பயன்படுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தை பயன்படுத்தியுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 - 2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும்.
குறிப்பிட்ட காலகட்டத்தில், ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி டெல்லியில் உள்ள குடோனில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வந்தனர். கடந்த மார்ச் 9ஆம் தேதி ஜாபர் சாதிக்கை போலீஸார் கைது செய்தனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி அவரைக் கைது செய்தது. அதைத்தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.