கோவிந்தா... கோவிந்தா.. கூப்பிட்டாலே ஓடி வரும் ஏழுமலையான்..

post-img

சென்னை: கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி பெருமாளை அழைத்தால் ஓடோடி வருவாரம். கோவிந்தா என இறைவனை அழைத்தால், பல ஜென்ம கடன் தீர்ந்து, ஊழ்வினை நம்மை பின் தொடராது என்பது ஐதீகம். கோவிந்தா என்பதன் அர்த்தம் என்ன?அது எப்படி பெருமாளின் பெயரானது என்று பார்க்கலாம்.


மகாவிஷ்ணு தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கலியுக கடவுளாக பக்தர்களால் வணங்கப்படுகிறார் திருவேங்கடமுடையான். திருமலையில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள். பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள். அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது கோவிந்தா' என்னும் நாமம்.


கோவிந்தா என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன், கூப்பிட்டகுரலுக்கு ஓடோடிவருபவன்'', "பூமியை_தாங்குபவன்'என்று பொருளாகும். 'கோவிந்தா' என்று சொன்னால் 'போனது வராது' என்று பொருள்படும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், 'பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது 'கோ' என்றால் 'பசு' 'இந்தா' என்றால் 'வாங்கிக்கொள்' என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.


பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது சூட்டப்பட்ட நாமம் கோவிந்தா' என்பது. ஆதி சங்கரரும் தனது பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தையே முன்னிலைப்படுத்துகிறார். ஆண்டாள், குறையொன்றும் இல்லாத கோவிந்தா' என்று சொல்லிப் போற்றுகிறார். அத்தகைய சிறப்புமிக்க கோவிந்த நாமம் வேங்கடவனுக்கு ஏற்பட்டதற்கு ஒரு சுவாரஸ்யமான புராண சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது.


மகாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க முடிவு செய்து, மனித வடிவில் திருப்பதிப் பகுதியில் தோன்றினார். மனித உருவில் வந்த காரணத்தால் அவருக்கும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வுகள் இருந்தன. தான் பால் அருந்த ஒரு பசு இருந்தால் நலம் என நினைத்தார். அவர் வசிக்கும் மலைக்கு அருகிலேயே ஒரு மலையில் முனிவர் அகத்தியரின் ஆசிரமம் இருந்தது. அகத்தியர் தன் ஆசிரமத்தில் பெரிய கோசாலை ஒன்றை வைத்திருந்தார். அதில் நூற்றுக்கணக்கான பசுக்கள் இருந்தன. வேங்கடேசன் அவர் குடிலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும் அவரே இந்த உலகத்தைக் காக்கும் மகாவிஷ்ணு என்பதை அகத்தியர் அறிந்துகொண்டார். வேங்கடேசனை வணங்கி வரவேற்றார்.


முனிவரே, நான் கலியுகத்தில் சில செயல்களை முடிக்கத் திருவுளம் கொண்டு இங்கு வந்து வசிக்கிறேன். தங்களிடம் உள்ள பசுக் கூட்டங்களிலிருந்து எனக்கு ஒரு பசுவினை தானம் செய்ய வேண்டும்" என்று கேட்டார். மூவுலகையும் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுதான் தன் குடிலுக்கு வந்து தன்னிடம் தானம் கேட்பது குறித்து அகத்திய முனிவர் மகிழ்ச்சியடைந்தார். அதே நேரத்தில் இந்த மாயவன் ஏன் நம்மைத் தேர்ந்தெடுத்தான் என்றும் யோசித்தார். இதில் ஏதேனும் மாயத் திருவிளையாடலைச் செய்யத் திருவுளம் கொண்டாரோ என்று சிந்திக்கலானார்.


ஐயனே, நீர் யார் என்பதை நான் அறிவேன். உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய நியதி எதுவுமில்லை. பசுவினை பிரம்மச்சாரிக்கு தானம் செய்யக் கூடாது என்று சொல்வர். ஒருவன் இல்லறத்தில் இருக்கும்போதுதான், அவனுக்கு தானமாகத் தரப்படும் பசுவினை அவன் நல்ல முறையில் பராமரிப்பான். இல்லத்தில் இருக்கும் அவன் மனைவி அந்தப் பொறுப்பைச் சரிவரச் செய்வாள். அப்படிப் பணிவிடை செய்ய ஆள் இல்லாத பிரம்மச்சாரிக்கு பசுவை தானமாகத் தர இயலாது. மேலும் கலியுகத்தில் தாங்கள் அவதரித்ததுபோல் அன்னை மகாலட்சுமியும் அவதரித்திருக்கிறார். நீங்கள் அன்னையைக் கரம் பற்றி தம்பதி சமேதராக இங்கு வருவீர்கள் என்றால் நான் அடுத்த கணமே தங்களுக்கு ஒரு பசுவை தானமென அளிக்கிறேன்" என்று பணிவுடன் கூறினார்.


பெருமாளும் முனிவர் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் அவர் அன்னை பத்மாவதியைத் திருமணம் செய்துகொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்குச் செல்லத் தொடங்கினார். அதற்கு முன்னர் அகத்தியரின் குடிலுக்குச் சென்று அவர் தருவதாகச் சொன்ன பசுவையும் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தார். அதற்காக அவர் முனிவரின் இருப்பிடம் சென்றார். ஆனால், முனிவர் அப்போது அங்கு இல்லை.
முனிவரின் சீடர்களே அங்கிருந்தனர். அவர்களிடம் பெருமாள், அகத்தியர் தமக்கு ஒரு பசுவை தானமாகத் தருவதாக வாக்குப் பண்ணியிருக்கிறார்' என்பதைச் சொல்லி பசுவைப் பெற்றுச் செல்லவே தான் வந்திருப்பதாகச் சொன்னார். அதைக்கேட்ட சீடர்கள், ஐயா தங்களையும் அன்னையையும் கண்டால் வைகுண்டவாசனான அந்தப் பரந்தாமனையும் அன்னை மகாலட்சுமியையும் போல் உள்ளது. தாங்கள் கேட்டு மறுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு. இந்த ஆசிரமத்தில் அனைத்தும் எங்கள் குருநாதர் அகத்தியருக்கே உரிமையானவை. அவர் அனுமதியில்லாமல் நாங்கள் எதையும் தரவும் பெறவும் இயலாது. நீங்கள் அவர் வரும்வரை இங்கேயே தங்கியிருந்தால் நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யக் காத்திருக்கிறோம். அதன்பின் குருதேவர் வந்ததும், நீங்கள் பசுவினை அவரின் திருக்கரத்தாலேயே பெற்றுச் செல்லலாம்" என்றனர்.


பெருமாள் அவர்கள் சொன்ன பதிலில் வருத்தம் கொள்ளாது அவர்களின் குருபக்தியையும் அதிதிகளிடம் காட்டும் மரியாதையையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தன் நிரந்தர வாசஸ்தலம் நோக்கிப் புறப்பட்டார். சற்று நேரத்துக்கெல்லாம் அங்கு வந்த அகஸ்தியர் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு வருத்தமுற்றார். உலகையே காக்கும் உத்தமனை ஒரு பசுவின் காரணமாக அலைக்கழித்துவிட்டதற்காக வருந்தினார். எப்படியும் பெருமாளைச் சந்தித்து தன்னிடம் உள்ளதில் ஆகச் சிறந்த பசுவினைத் தந்துவிடுவது என்று முடிவு செய்து காமதேனுவைப் போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக்கொண்டு பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக்கொண்டு சென்றார்.

 

சுவாமி கோவு - இந்தா" என்று சத்தமிட்டார். தெலுங்கில் கோவு' என்றால் பசு. இந்தா' என்றால் எடுத்துக்கொள் என்று பொருள். ஆனால் சுவாமிக்கு முனிவரின் குரல் கேட்கவில்லை போலும். மீண்டும் சத்தமாக சுவாமி கோவு இந்தா' என்று சொன்னார். அப்போதும் அவர் திரும்பவில்லை.


மீண்டும் மீண்டும் சுவாமி கோவு இந்தா... சுவாமி கோவு இந்தா... சுவாமி கோவு இந்தா" என்று அழைத்துக்கொண்டேயிருந்தார்.
அதுவரை அன்னநடை போட்டுக்கொண்டிருந்த பெருமாளும் தாயாரும் விரைவாக நடக்க ஆரம்பித்துவிட்டனர். அகத்தியரோ தன் குரலை இன்னும் உயர்த்தி கோவு இந்தா கோவு இந்தா' என்று வேகவேகமாக உச்சரிக்க அது கோவிந்தா... கோவிந்தா என்று ஆனது. கோவிந்தா கோவிந்தா என்று அவர் அழைத்தது 108 முறை ஆனதும் பெருமாள் நின்றார். திரும்பிப் பார்த்தார். அகத்தியர் மூச்சு வாங்க அவரிடம் ஓட்டமும் நடையுமாய்ப் பசுவோடு வந்தார். பெருமாள் அவரை ஆசுவாசப்படுத்தி, அந்தப் பசுவை தானமாகப் பெற்றுக்கொண்டார்.


இந்தக் கலியுகத்தில் என்னை அழைக்க உகந்த நாமம் கோவிந்தா' என்பதே. நீங்கள் கோவு - இந்தா' என்று சொன்னதன் மூலம் கோவிந்தா' என்னும் நாமத்தைச் சொல்லி என்னை மகிழ்ச்சிப்படுத்தினீர். நீர் மட்டுமல்ல, இனி யார் யார் எல்லாம் தம் ஜீவனாகிய பசுவினை என்னிடம் சேர்ப்பிக்க விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் கோவிந்தா' என்னும் நாமத்தைச் சொன்னாலே போதும், நான் உடனடியாக அவர்களை நோக்கி அனுக்கிரகம் செய்வேன்" என்று கூறி திருமலைக்கு சென்றார் சீனிவாச பெருமாள்,


ஏழுமலையான் கோவிலுக்கு சென்று கோவிந்தா என்று வழிபட்டால், கூடுதல் பலன்களைப் பெறலாம். கோவிந்தன் நாமத்தை இன்றைய இளைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பதாலேயே திருமலையில் சிறப்பான திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் "கோவிந்தா" நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.


கோவிந்தா' என்று சொன்னால் போனது வராது' என்று பொருள்படும். அதாவது, கோவிந்தா என இறைவனை அழைத்தால், பல ஜென்ம கடன் தீர்ந்து, ஊழ்வினை நம்மை பின் தொடராது என்பது ஐதீகம். கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது கோ' என்றால் பசு' இந்தா' என்றால் வாங்கிக்கொள்' என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

 

Related Post