யோகா உலகை இணைக்கிறது.. அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி மெசேஜ்!

post-img

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். நியூயார்க் சென்றடைந்த அவர் தொழில் அதிபர்கள், நோபல் பரிசு வென்றவர்கள், பல்வேறு துறை வல்லுனர்கள், விஞ்ஞானிகள், முன்னணி நிறுவன சிஇஓ-க்கள் போன்றோரை சந்தித்தார். இன்று பிரதமர் மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கும் யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

PM Modi video message on International yoga day

ஐ.நா. சபை தலைமையகத்தில்  நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை அவர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். யோகா பயிற்சியும் மேற்கொள்கிறார். சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் நடைபெறும் யோகா அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமையேற்பது இதுவே முதல்முறை.

ஐ.நா சபையின் தலைமையகத்தில் உள்ள வடக்கு புல்வெளியில் இன்று காலை 8 முதல் 9 மணி வரை சர்வதேச யோகா அமர்வு நடைபெறுகிறது. இதில், ஐ.நாவின் உயர்நிலை அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ஐ.நா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், யோகா தினத்தையொட்டி அமெரிக்காவில் இருந்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார் இந்திய பிரதமர் மோடி.

அந்த வீடியோவில், "சர்வதேச யோகா தினத்தின் மூலம் யோகா உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. யோகா உலகை இணைக்கிறது. யோகா மூலம் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரே குடும்பம்) என்ற கருப்பொருளுடன் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் யோகா செய்கிறார்கள்.

PM Modi video message on International yoga day

யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல், மூளை, ஆன்மாவை அமைதி படுத்தலாம். அவசர அவசரமாக பணிக்கு சென்றாலும் அவசியம் நாள்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். இந்தியாவின் அழைப்பின் பேரில் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் யோகா தினத்திற்கான முன்மொழிவு வந்தபோது, அது பெரும்பான்மையான நாடுகளால் ஆதரிக்கப்பட்டது" என மோடி கூறியுள்ளார்.

Related Post