கடலூர்: பெஞ்ஜல் புயல் காரணமாக கடலூரில் கடந்த 30-ந் தேதி காலை முதல் 1-ந் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியதால் கடலூரில் உள்ள கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்து செல்லப்பட்ட எருமை மாடு ஒன்று கடலூர் கடலில் 6 நாட்களாக தத்தளிப்பதாக சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
பெஞ்ஜல் புயல் காரணமாக கடலூரில் கடந்த 30-ந் தேதி காலை முதல் 1-ந் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. கடலூர் புதுக்குப்பம், வன்னியர்பாளையம், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர் தானம் நகர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை அப்போது மழைநீர் சூழ்ந்தது. அந்த பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. கடலூரில் உள்ள சாலைகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. உச்சிமேடு, நாணமேடு, பெரியகங்கணாங்குப்பம் உள்ளிட்ட பகுதியில் மக்கள் அப்போது வெள்ளத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை படகு மூலம் மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனிடையே கனமழை காரணமாக கடலூரில் உள்ள கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே கடந்த 3-ந் தேதி கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த குணா, சேகர், கேசவன், கண்ணையன் உள்ளிட்ட 7 பேருக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட மாடுகள் துறைமுகம் பகுதி கடற்கரையோரம் மேய்ந்தன.அதன் பின்னர் அந்த மாடுகள் கடற்கரையோரம் மேய்ந்தபடி கடலூர் சில்வர் பீச் வரை வந்தது. அப்போது அங்குள்ள உப்பனாறு வெள்ளம் வடிவதற்காக வெட்டப்பட்டிருந்த முகத்துவாரத்தில் அந்த மாடுகள் இறங்கின. அந்த சமயத்தில் தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 32 எருமை மாடுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல் போயின.
அந்த மாடுகளை மீனவர்கள் மீட்க எவ்வளவோ போராடினார்கள். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதனால் எருமை மாடுகள் கடலில் மூழ்கியது. இந்த நிலையில் ஒரு எருமை மாடு மட்டும் கடந்த 6 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் கடலில் மாடு ஒன்று தத்தளிப்பது போன்ற வீடியோ, கடந்த 3 நாட்களுக்கு முன்பு எடுத்தது. அதுவும் இறந்து கடல் நீரில் மிதந்து கொண்டிருந்த மாடு தான். கடல் நீரை குடித்துக் கொண்டு மாடுகளால் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது. கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள் அனைத்தும் இறந்துவிட்டன. அவை கடற்கரையோரம் பல்வேறு பகுதிகளில் உடல் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது" என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage