சென்னை: சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ரூ.100 கோடி செலவில் பிரமாண்ட பூங்கா அமைய உள்ளது. இதற்கான திட்டங்கள் மற்றும் நிதிக்கு அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், 3 மாதங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பூங்கா பயன்பாட்டிற்கு வந்த பிறகு சென்னை மக்களுக்கு மெரினாவுக்கு அடுத்தபடியாக பிரம்மாண்ட பொழுதுபோக்கு இடமாக இது அமையும் என எதிபார்க்கப்படுகிறது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் வசிக்கும் மக்கள் வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரைக, பூங்காக்களுக்கு சென்று பொழுதை கழிப்பது வழக்கம். தீப்பெடி போன்ற சிறிய வீடுகளுக்குள் வசிக்கும் மக்கள் கூட அவ்வபோது மாநகராட்சி பூங்காக்களுக்கும், பீச்-களுக்கும் சென்று இளைப்பாறவே விரும்புவார்கள்.
பிரமாண்ட பூங்கா:
சென்னையை பொறுத்தவரை பல்வெறு சுற்றுலா பகுதிகள் இருந்தாலும் அனைத்து வசதிகளையும் பிரமாண்ட பூங்கா என எதுவும் இல்லை. சிறிய பூங்காக்கள் ஆங்காங்கே இருக்கின்றன. ஆனாலும் நாள் முழுக்க குடும்பத்துடன் பொழுதை கழிக்கும் வகையில் பெரிய பூங்காக்கள் எதுவும் இல்லை. மக்களின் இந்த குறையை போக்க புதிய பிரமாண்ட பூங்கா ஒன்றை உருவாக்கவும் அரசு முடிவு செய்தது.
அந்த வகையில் சென்னை ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே திருவிடந்தையில் 'நந்தவனம்’ பாரம்பரிய பூங்கா ஒன்றை அரசு கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான 211 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைய உள்ளது. ரூ.99 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளது.
ஏராளமான திட்டங்கள்:
இந்த பூங்கா அமைப்பதற்காக அனைத்து ஒப்புதலும் கிடைத்துவிட்டதாம். அதாவது, கடலோர ஒழுங்கு முறை மண்டலம் உள்பட தேவையான அனைத்து துறைகளின் ஒப்புதலும் கிடைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான நிதி அனுமதிக்காக தமிழக சுற்றுலாத்துறை காத்துக் கொண்டு இருந்தது. தற்போது நிதிக்கான அனுமதியும் கிடைத்தது. இந்த பிரமாண்ட பூங்காவில் விஹார வளாகம், சோலைவனம் வளாகம், மைதான வளாகம் என 3 வளாகங்களாக பிரித்து ஏராளமான திட்டங்கள் செயல்படுத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளதாம்.
விஹாரம் வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா, நட்சத்திர வனம், நவக்கிரக வனம், துளசி வனம், கோயில் ஸ்தலவிருட்சங்கள், ராசி வனம், கோவில்களில் பயன்படுத்தப்படும் மலர்கள் நிறைந்த வனம் ஆகியவை இடம்பெற உள்ளன. சோலைவனம் வளாகத்தில், தமிழ்நாட்டில் உள்ள பிரதான கோவில்களின் வடிவமைப்பை கொண்ட மாதிரி சிறிய உருவ கோயில்கள், சிற்ப பூங்கா, பாரம்பரிய நடனம் உள்ளிட்டவற்றை கொண்ட தத்ரூப வடிவமைப்புகள் அமைக்கப்பட உள்ளதாம்.
என்னென்ன வசதிகள் உள்ளன?:
இது மட்டும் இன்றி பூங்கா மைதான வளாகத்தில் 25 ஆயிரம் கூடும் அளவுக்கு பிரமாண்ட இடம் ஒன்று ஒதுக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாம். பூங்காவிற்கு பின்பக்கத்தில் 3 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையை அணுக முடியும். இது மட்டும் இன்றி இந்த பூங்காவிற்கு ஈசிஆர் சாலையில் இருந்து எளிதாக செல்லும் வகையில் கட்டமைக்கப்பட உள்ளது.
6 பெரிய நுழைவு வாயில்களுடன் இது கட்டமைக்கப்பட உள்ளது. 4 ஆயிரம் கார்கள், பைக்குகள் நிறுத்தும் அளவுக்கு பிரமாண்ட பார்க்கிங் வசதி, டாய்லட் வசதி உள்ளிட்டவைகளும் செய்யப்பட உள்ளன. திடீரென மழை வந்தால் பூங்காவில் நிற்கும் மக்கள் ஒதுங்க இடங்கள் என பல நவீன வசதிகளுடன் பாரம்பரியத்துடன் இந்த பூங்கா அமைய உள்ளது.
எப்போது பணிகள் தொடங்கும்?:
இந்த பூங்கா அமைக்கும் பணிகள் 2 அல்லது 3 மாதங்களில் தொடங்க உள்ளதாக தமிழக அரசின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பூங்காவில் மரங்கள், செடிகள் அனைத்து, மண் வளத்திற்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் நடப்பட உள்ளது. இந்த பூங்காவிற்கு வரும் மக்கள் சிரமம் இன்றி பார்த்துவிட்டு செல்லும் வகையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் அமைக்கப்பட உள்ளதாக கூறினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு விடுமுறை நாட்களில் மக்கள் அதிக அளவு செல்வதை காண முடியும். தற்போது அங்குள்ள பகுதியில் பிரமாண்ட பூங்க அமைக்க இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.