பெங்களூர்: கர்நாடகாவில் பஞ்சமசாலி ஜாதியினர் தங்களுக்கு 2-ஏ இடஒதுக்கீடு வழங்க கோரி 5,000 டிராக்டர்களுடன் சட்டசபையை நாளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். கர்நாடகா சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று பெலகாவியில் தொடங்குகிறது. சட்டசபை முற்றுகையிடும் போராட்டத்தை போலீசார் தடுத்தால் அதே இடத்தில் அமர்ந்து காலவரையற்ற போராட்டமாக மாற்றுவோம் எனவும் பஞ்சமசாலி ஜாதி மடாதிபதி ஜெயமிருதஞ்ஜெய சுவாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் லிங்காயத்துகள், ஒக்கலிகா ஜாதியினர் பெரும்பான்மையினராக உள்ளனர். லிங்காயத் ஜாதியினரின் துணை ஜாதிதான் பஞ்சமசாலி லிங்காயத்துகள். லிங்காயத்துகளில் இந்த பிரிவினர் 70%. இந்த ஜாதியினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 2ஏ பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இப்படி 2 ஏ பிரிவில் சேர்ப்பதன் மூலம் கூடுதலாக இடஒதுக்கீடு பெற முடியும் என்பது பஞ்சமசாலி ஜாதியினரின் எதிர்பார்ப்பு.
அதாவது கர்நாடகாவில் மொத்தம் 50% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. லிங்காயத்துகளில் வீர சைவ லிங்காயத்துகள் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இடஒதுக்கீட்டில் பிரிவு 3B-ல் 5% இடஒதுக்கீடு பெறுகின்றனர். ஆனால் பிரிவு 2A-க்குள் தங்களை கொண்டு வந்து 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் பஞ்சமசாலி லிங்காயத்துகள் கோரிக்கை.
லிங்காயத்துகள் பொதுவாக பாஜகவின் வாக்கு வங்கியாக உள்ளனர். ஆனால் கடந்த பாஜக ஆட்சியில் பஞ்சமசாலி ஜாதியினர், இந்த இடஒதுக்கீட்டு விவகாரத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காமல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தனர் பஞ்சமசாலி ஜாதி வாக்காளர்கள்.
இந்த நிலையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி பகிரங்கப்படுத்தியுள்ளது. ஆனால் கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளான ஒக்கலிகா கவுடா, லிங்காயத்துகள் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை ஏற்க மறுக்கின்றனர்.
இந்த பின்னணியில் பஞ்சமசாலி லிங்காயத்துகள் மீண்டும் தங்களது இடஒதுக்கீடு கோரிக்கையை கையில் எடுத்துள்ளனர். இது தொடர்பாக பெலகாவியில் பஞ்சமசாலி மடாதிபதி ஜெயமிருதஞ்ஜெய சுவாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் ஜாதிக்கு 2 ஏ பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை கர்நாடகா சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில் 5,000 டிராக்டர்களில் பங்கேற்க உள்ளோம். மேலும் 10,000-க்கும் அதிகமான வழக்கறிஞர்களும் இந்தப் போராட்டத்தில் இணைய உள்ளனர். எங்களை போலீசார் தடுத்தால் அதே இடத்திலேயே அமர்ந்து தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார். கர்நாடகா சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் பஞ்சமசாலி லிங்காயத்துகளின் இந்த போராட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage