சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான 6 மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் விலை, வீடுகள் விலை புதிய உச்சத்தை அடையும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மெட்ரோ பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் வீடுகளின் விலை, ரியல் எஸ்டேட் மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் சந்தையை கண்காணித்து வருபவர்கள் கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் பாதையில் கட்டுமானம் மற்றும் பயணம் தொடங்கியதில் இருந்தே சொத்துகளின் விலை உயர்ந்துள்ளது.
நிலத்தின் விலைகள் சராசரியாக 20% முதல் 35% வரை உயர்ந்துள்ளது (இடம், தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை பொறுத்து). இன்னொரு பக்கம் கட்டிய வீடு சொத்து விலைகள் 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளன. வரவிருக்கும் மெட்ரோ பாதைகள் முழுவதும் உள்ள இடங்கள் ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து புதிய விலைக்கு ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.
அதன்படி கிண்டி கடந்த பத்தாண்டுகளில் சராசரி சொத்து விலையில் 35% அதிகபட்ச விலை உயர்வைக் கண்டுள்ளது. கிண்டியில் 2013 இல் ஒரு சதுர அடிக்கு ₹10,000 முதல் 2023 இல் கிட்டத்தட்ட ₹13,500 வரை உயர்ந்துள்ளது. வடபழனியில், 2013 இன் சராசரி விலைகள் ஒரு சதுர அடி ₹7,900 ஆக இருந்தது, தற்போது ஒரு சதுர அடி ₹10,000 ஆக உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டையில் ஒரு சதுர அடிக்கு ₹9,500 ஆக இருந்தது, தற்போது அது 25% அதிகரித்து ₹11,900 ஆக உள்ளது.
மாதவரம் மற்றும் அதன் புறப் பகுதிகள், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி மற்றும் அதற்கு அப்பால் உள்ளபகுதிகள் , பூந்தமல்லி முதல் போரூர் வரை 20% முதல் 40% வரை அதிகரித்துள்ளன என்று ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற 5 மாவட்டங்கள்: சென்னை மட்டுமின்றி திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மற்ற 5 மாவட்டங்களிலும் வீடுகள் விலை எகிறும் வாய்ப்புகள் உள்ளன. மெட்ரோ பாதைகள் வரும் இடங்களில் எல்லாம் வீடுகள் விலையும் அதிகரிப்பது வழக்கம். மெட்ரோ எங்கே இருக்கிறதோ அங்கே நிலத்தின் மதிப்பு கூடும்.
அந்த வகையில் திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மற்ற 5 மாவட்டங்களிலும் மெட்ரோ அல்லது லைட் மெட்ரோ வருவதால் இங்கேயும் வீடு விலைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
மதுரை மெட்ரோ: மதுரை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இரண்டு மெட்ரோவிற்கான ரிப்போர்ட் இந்த வாரமே அளிக்கப்பட உள்ளது.
அதாவது எங்கிருந்து எங்கே பாதை அமைக்கலாம்.. மேலே பாலம் அமைப்பது.. கீழே சாலைக்கு அடியில் அமைப்பது போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய ரிப்போர்ட் இந்த மாதம் அளிக்கப்பட உள்ளது. மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யயப்பட உள்ளது. அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும்.
சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரையில் முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.
இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.
கோவை மெட்ரோ: கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும். இதற்கான உத்தேச திட்ட அறிக்கை நேற்று வெளியானது. அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும்.
சேலம், திருச்சி, நெல்லை மெட்ரோ: திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின் ரூட் மற்றும் அமைய உள்ள நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் இன்று (31.08.2023) சமர்பித்தார்.
தற்போது சென்னையில் மெட்ரோ இரயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கிவருகிறது. அதே போல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாத்தியக் கூறு ஆய்வின் மூலம் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் இந்த சாத்தியக் கூறு அறிக்கையில் கண்டறியப்பட்டன. அதன்படி போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
லீஸுக்கு வீடு வேணுமா? வாடகை வீட்டுக்காரர்களா? வீட்டுக்கடன் வேணுமா? திருச்சியை திணறடித்த
திருச்சிராப்பள்ளி: திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் வழித்தடங்களில் 2 45 கி.மீ நீளத்திற்கு 45 நிலையங்கள்கண்டறியப்பட்டுள்ளன.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 3-ல் 15 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம்: சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் இரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித கால போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மாற்றம் வரலாம். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage