அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி ஏன் விமர்சிக்கவில்லை என திமுக கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் பதில் கொடுத்துள்ளார்.
அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித் ஷாவைக் கண்டிக்கக் கூட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்காக பாஜகவிடம் அதிமுக கொல்லைப்புறத்தில் கெஞ்சுவதைத் தான் அதன் பொதுக்குழு தீர்மானங்கள் காட்டுவதாக காட்டமாக விமர்சித்தார். அதில், “மனிதர் நிதானம் இழந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேச முடியும். ஆத்திரத்தில் அவர் பேசியது என்னவெனது அவரது பேச்சின் வெளிப்பாட்டிலேயே தெரியும்.” என்றார்.
இதற்கிடையே, அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே பதில் அளித்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர் இல்லை என விமர்சித்தார்.
மேலும், அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துவிட்டதாகவும் அதே கருத்து தான் தமது கருத்து என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனிடையே, அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் குறைந்தது ஆறு மாதத்திற்கு உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷாவை, பிரதமர் மோடி நீக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித் ஷாவைக் கண்டித்து ஆர்.எஸ்.பாரதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, அம்பேத்கரை முதன் முதலாக அங்கீகரித்தது தமிழ்நாடு தான் என்று தெரிவித்தார்.
மேலும், “மதத்தின் பெயரால் அரசியல் செய்யலாம்” என்கிறார் அமித் ஷா. மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துக்கள் அமைந்திருப்பதால் அவரை இழிவு செய்கிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில், பெரியாரின் ஆலோசனையைப் பெற்று அம்பேத்கர் செயல்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி கூறினார்.