அயோத்தி ராமர் கோவில் ஷாக்..அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் பூசாரி படுகொலை

post-img

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் கோவில் பூசாரி ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி கேமராக்களை ஆஃப் செய்துவிட்டு இந்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு பூசாரியை போலீசார் வலை வீசி தேடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"கடவுள்" ராமர் "பிறந்த" இடமாக கருதப்படுவது உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி. அங்குள்ள ராமஜென்ம பூமியில் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தது. 1992-ம் ஆண்டு இந்துத்துவா அமைப்புகளால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பான வழக்கு நீண்டகாலம் நடைபெற்றது. இந்த வழக்கில் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய இடம் இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதே இடத்தில் தற்போது பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பிரம்மாண்ட ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடைகள், ராமர் கோவில் கட்ட நிதியாக வசூல்க்கப்பட்டு வருகிறது.


அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் வளாகத்தில் அதி உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வளாகமும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் "ஹனுமன்கரி" என்ற கோவிலும் உள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாகும். இந்த கோவில் பூசாரியாக இருந்தவர் ராம் சஹாரே தாஸ் (வயது 44). இவர் சன்னியாசிகளின் நிர்வாண சாமியார் வகையை சேர்ந்தவர். நாகா சாது என்றழைக்கப்படுபவர்.


இன்று காலை ஹனுன்கரி கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்தர்களும் இதர கோவில் நிர்வாகிகளும் ராம் சஹாரே தாஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அந்த அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மிதந்தார் ராம் சஹாரே தாஸ். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பூசாரியின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் ராம் சஹாரே தாஸுடன் அறையில் தங்கி இருந்த மற்றொரு சாமியாரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. அத்துடன் சிசிடிவி பதிகள் திட்டமிட்டு சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ராமர் கோவில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் சாமியார் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Post