ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் பவுன்சர் அந்தோணியை போலீஸார் கைது செய்தனர். புஷ்பா 2 பட வெளியீட்டின் போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீமியம் காட்சியானது கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி வெளியானது. இந்த காட்சியை ரசிகர்கள் பார்த்தனர். அப்போது திடீரென இந்த படம் ரிலீஸான ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வருகை தந்திருந்தார்.
இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் உற்சாக மிகுதியில் துள்ளி குதித்தனர். எப்படியாவது அல்லுவை பார்த்து செல்பி எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஒரே நேரத்தில் ரசிகர்கள் முண்டியடித்தனர்.
அப்போது அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் தனது கணவர், இரு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த ரேவதி (39) என்பவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அது போல் அவருடைய மகனுக்கும் மூச்சுத்திணறியது.
இதையடுத்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணையும் சிறுவனையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
ஆனாலும் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் அவரது மகன் கோமாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ரேவதி இறந்ததை கூட தனது மகளுக்கு சொல்லாமல் அவர் ஊருக்கு போயிருப்பதாக சொல்லியிருக்கிறாராம் தந்தை பாஸ்கர். இது கொடுமையிலும் கொடுமை!
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் திடீரென தியேட்டருக்கு வந்ததுதான் நெரிசலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் தான் சினிமா தியேட்டருக்கு வர போவதாக தியேட்டர் நிர்வாகத்திடமும் போலீஸாரிடமும் அல்லு சொல்லவில்லை என கூறப்படுகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்தும் அல்லு அர்ஜுன் காரில் மேல் ஏறி நின்று ரோடு ஷோ நடத்தினார் அல்லு என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு சிறையில் இருந்த அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் இந்த விவகாரத்தை தெலுங்கானா அரசு லேசில் விடுவது போல் தெரியவில்லை.
ஏற்கெனவே தான் முதல்வராக இருக்கும் வரை தெலுங்கானாவில் ப்ரீமியம் ஷோவிற்கு அனுமதி கிடையாது என ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அல்லுவிடம் விசாரணை நடத்த ஹைதராபாத்தில் உள்ள சிக்கடப்பள்ளி போலீஸார் நேரில் வரச் சொல்லி சம்மன் அனுப்பினர்.
அதன் பேரில் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் தனி பாதுகாவலர் (பவுன்சர்) அந்தோணியை போலீஸாரை கைது செய்தனர். இவர்தான் சந்தியா தியேட்டரில் அல்லு செல்வதற்கான பவுன்சர்களை ஏற்பாடு செய்திருந்தாராம். இந்த விசாரணைக்கு பிறகு அல்லு அர்ஜுனை சந்தியா தியேட்டருக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்துவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் 4 மணி நேர விசாரணைக்கு பிறகு அல்லு புறப்பட்டுச் சென்றார்.