ஜெயிக்க விட்ருவோமா? மத்திய பிரதேசத்தில் ஷாக் கொடுக்கும் பாஜக..

post-img

போபால்: முன்னணி செய்தி ஊடக நிறுவனமான டைனிக் பாஸ்கர் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி - பாஜக இடையே நெருக்கமான போட்டி நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சீட்களில் காங்கிரஸ் முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ம.பி முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்.


ஆனால், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு சென்றதால் ஒன்றரை ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று, மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 17ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தமாக 76.22% வாக்குகள் பதிவானது. 75.84% ஆண் வாக்காளர்களும், 74.01% பெண் வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களித்திருந்தனர்.


தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் என ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்டமாக தெலுங்கானாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிவடைந்துள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், பாஜக என இருமுனை போட்டியாகவே மத்தியப் பிரதேச தேர்தல் பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் டைனிக் பாஸ்கர் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 105 முதல் 120 தொகுதிகளில் வெல்லும் எனவும் பாஜக 95 முதல் 115 தொகுதிகளில் வெல்லும் எனவும், மற்ற கட்சிகள் 0-15 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post