சென்னை: இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) 2025 ஆம் ஆண்டில் சென்னை மாநகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையில் 25 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று கணித்திருக்கிறது. மேலும் சென்னையில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் 20 சதவீதம் வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். வீடுகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் வீட்டு வாடகை கடந்த ஓராண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் தனி சொகுசு வீடுகள் என்பது இனி கோடீஸ்வரர்களே வாங்க முடியாத அளவிற்கு மாறப்போகிறது. 50 முதல் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்தவர்கள் சென்னையில் பெரிய சொகுசு வீடுகள் கட்ட முடியும் என்கிற அளவிற்கு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏனெனில் சென்னை மாநகருக்குள் நகரின் நிலத்தின் மதிப்பே பல கோடிகளில் உள்ளது. சென்னை மட்டுமல்ல, தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, மணலி, எண்ணூர் உள்பட சென்னையை சுற்றியுள்ள நிலத்தின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.
அதேபோல் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு வீடு இருந்த இடங்கள் எல்லாம் 10 வீடுகள் , 50 வீடுகள் என்கிற அளவில் வளர்ந்து வருகின்றன. கொரோனா காலத்தில் முடங்கி கிடந்த சென்னையின் ரியல் எஸ்டேட் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. வொர்க் ப்ரம் ஹோம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு நிறுவனங்கள் தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
சென்னையில் இருந்தே ஆக வேண்டும் என்றும், அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்றும் உத்தரவிட்ட பிறகே தென்சென்னையில் நிலைமை அடியோடு மாறிவிட்டது. 10 ஆயிரம், 12 ஆயிரம் கொடுத்து கூட கொரோனா காலத்தில் குடியேறாமல் இருந்த அடுக்குமாடி வீடுகளில் எல்லாம் இன்று வீடே கிடைப்பது இல்லை. 2 படுக்கை அறை கொண்ட வீடுகளின் வாடகை 20 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது. சென்னை முழுக்க வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது.பல ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சென்னையில் வந்து கொண்டே இருப்பதால் சென்னைக்குள் அடுக்குமாடி திட்டங்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) 2025 ஆம் ஆண்டில் சென்னை மாநகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையில் 25 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று கணித்திருக்கிறது. 2024-25ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் வளர்ச்சி 15%-20% அதிகரிக்கும் என்றும் கிரடாய் கணித்தள்ளது. புதிய அடுக்குமாடி திட்ட வெளியீடுகள், 2024-25ம் நிதியாண்டின் 3வது காலாண்டுடன் ஒப்பிடும்போது 10%-15% வரை வளர வாய்ப்புள்ளதாகவும் கிரடாய் கணித்துள்ளது. குடியிருப்பு சந்தைதேவை அதிகரிப்பின் காரணமாக 2025 இல் 20%-25%. வரை அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய அடுக்குமாடி திட்டங்களை பொறுத்தவரை , வேகமாக வளர்ந்து வரும் பகுதிகள் மற்றும், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு உள்ள பகுதிகள், நகரின் புறநகர் பகுதிகளில் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி மற்றும் போரூர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளின் தேவை அதிகமாக இருக்கும் என தெரிகிறது. 2024 ஆம் ஆண்டில் தென்சென்னை தான் குடியிருப்பு விற்பனையில் முன்னிலையில் இருந்தது என்றும் கிரடாய் கூறியுள்ளது.
வடசென்னையை பொறுத்தவரை மணலி, கொருக்குப்பேட்டை போன்ற பகுதிகளில் புதிய அடுக்குமாடி திட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது .. மத்திய சென்னையை பொறுத்தவரை, தி நகர் நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகள் வணிக மையங்களுக்கு அருகாமையில் உள்ளதால், வாங்குபவர்களை மிகவும் ஈர்க்கின்றன. அதே நேரத்தில் மேற்கு சென்னை பகுதிகளான அம்பத்தூர் மற்றும் ஆவடி போன்ற பகுதிகளில் வீடுகளின் விலை மலிவாக உள்ளதால் பலரும் விரும்பும் பகுதிகளாக மாறி வருகின்றன. இதனால் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.