சென்னை: தொழில்நுட்பம் வளர வளர, புதுவகையான மோசடிகள் அரங்கேறி வருகின்றன.. ஆன்லைன் மோசடிகள் , வங்கி மோசடிகள் என பல்வேறு துறைகளில் அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்தும் வருகின்றன. அந்தவகையில், கொரியர் சர்வீசில் நடக்கும் புது மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அதிலும் புதுபுது வகைகளில் இந்த மோசடிகள் நடப்பதால், சைபர் கிரைம் போலீசாரும் பொதுமக்களை அறிவுறுத்தி, அலர்ட் செய்தபடியே உள்ளனர். இன்றுகூட ஒரு மோசடி ஏர்போர்ட்டில் நடந்துள்ளது.
புதுபுது மோசடி: அதாவது, சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக மோசமான வானிலை, புயல் மற்றும் கனமழை காரணமாக பல விமானங்கள் தாமதம், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இதை பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பல் ஒன்று, பாதிக்கப்பட்ட விமான பயணிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.. விமான பயணம் தாமதம் அல்லது ரத்து போன்றவற்றிற்கு இழப்பீடுகள் தருவதாக சொலலி, அவர்களது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு, லட்சக்கணக்கில் பணத்தையும் சுருட்டியிருக்கிறது.
செல்போன் அழைப்பு: அதிலும், போலியான செல்போன் அழைப்புகள் மூலம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமான பயணிகளிடம் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது..
ஆனால், இதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும், இதுபோன்ற இழப்பீடுகள் கொடுக்கும் திட்டம் இலலை என்பதால், போலியான செல்போன் அழைப்புகள் வந்தால், பயணிகள் யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்து வருகிறார்கள்.
இதுபோலவே கொரியர் அனுப்பும் பார்சலிலும் மோசடிகள் நடந்து கொண்டிருகின்றன.. இந்த கொரியர் பெயரில் நடக்கும் நூதன மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி? என்பது குறித்து காரைக்கால் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் விளக்கம் ஒன்றை பொதுமக்களுக்காக அளித்துள்ளார்.
மோசடிகள்: அதில், "புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த சில வாரங்களாக அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கொரியர் மூலமாக பணம் பறிக்கும் மோசடிகள் ஆங்காங்கே நடைபெற்று வருவது சைபர் கிரைம் பிரிவுக்கு தெரியவந்துள்ளது.
பொருட்களை வெவ்வேறு ஊருகளுக்கோ, மாநிலத்திற்கோ அல்லது நாடுகளுக்கோ அனுப்ப கொரியர் சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான டி.எச்.எல் பெயரில் நடக்கும் நூதன மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த மோசடி அதிகளவில் நடக்கிறது.
டெலிவரி: கொரியர் மூலம் ஒரு பொருளை அனுப்பினால் அது சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவர்களுக்கு கொரியர் டெலிவரி செய்பவர் போனில் அழைப்பார்கள்.. ஒருவேளை அந்த நேரத்தில் நீங்கள் அழைப்பை ஏற்காவிட்டால், அந்த கொரியர் மறுபடியும் சேமிப்புக் கிடங்குக்கே கொண்டு செல்லப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிடுவார்கள். பிறகு அந்த பொருளை சம்பந்தப்பட்ட நபர் மீண்டும் வாங்க ஒரு வழிமுறை இருக்கும்.
அப்படி டிஎச்எல் நிறுவனம் யாரேனும் டெலிவரி வாங்காவிட்டால் அவர்களுக்கு க்யூ.ஆர்.கோடு உடன் கூடிய ஒரு குறிப்பேடு ஒன்று அனுப்பப்படும். அந்த குறிப்பேடு மூலம்தான் இந்த நூதன மோசடி நடக்கிறது.
இணைய பக்கம்: போஸ்ட் கார்டு சைஸில் இருக்கும் அந்த தவறவிட்ட டெலிவரிக்கான குறிப்பேடில் டி.எச்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கான லிங்கும், இருக்கும். அது நேரடியாக டி.எச்.எல் இணைய பக்கத்துக்கு கொண்டு செல்லும். ஒருவேளை அதில் உள்ள லிங்கை போட்ட பிறகு அது வேறொரு பக்கத்துக்கு சென்றால் உடனடியாக டி.எச்.எல்-ஐ அணுகுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
அதேபோல் தவறவிட்ட டெலிவரியை மீண்டும் பெற டி.எச்.எல் எந்தவித கட்டணமும் வசூலிக்காது. ஒருவேளை கட்டணம் செலுத்த சொன்னால் அது போலியான தளம் என்பதையும் நீங்கள் கண்டறிய முடியும். ஒருவேளை தவறவிட்ட டெலிவரிக்கான குறிப்பேடு வந்திருந்தால், உடனடியாக டி.எச்.எல் இணைய பக்கத்திற்கு சென்று அதில் டி.எச்.எல் வேபில் எண்ணை பதிவிட்டு பார்த்தால் அது உண்மையானதா இல்லை போலியானதா என்பது தெரிந்துவிடும்.
உஷாராக இருக்க வேண்டும்: உண்மையானதாக இருந்தால் உங்களது விவரங்கள் அனைத்தும் காட்டும்.. போலியானதாக இருந்தால் எதுவும் காட்டாது. இந்த மோசடிகளில் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும்" என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.