ஆளுநர் ரவி நெல்லை பயணம்..இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா

post-img

நெல்லை: புகழ்பெற்ற மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 30 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

தமிழ்நாட்டில் பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருவது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம். 30 ஆண்டுகளாக தென் தமிழ்நாடு மாவட்ட மாணவர்களுக்கு கல்விச் சேவை ஆற்றி வரும் இந்த பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதில் பட்டப்படிப்பை முடித்த 459 பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்க இருக்கிறாா்.

இவர்களுடன் சேர்த்து கடந்த 2022 - 23 ஆம் கல்வியாண்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் படித்த மொத்தம் 40,622 போ் பட்டம் பெறுகின்றனா். இன்று காலை 10 மணி அளவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள வ.உ சிதம்பரனாா் கலையரங்கில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மற்றும் உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பங்கேற்க உள்ளார்.

இவர்களுடன் ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கான்பூா் ஐஐடி பேராசிரியருமான நளினாக் எஸ்.வியாஸ் விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையை நிகழ்த்த உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி. சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார். அவர் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்று காலை 7.25 மணி அளவில் வருகை தந்து உள்ளார்.

அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்கு செல்லும் அவா், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். அங்கு காலை 11.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தங்கப் பதக்கம் பெற்ற பல்கலைக்கழக மாணவிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாட உள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னா் தூத்துக்குடி விமானம் நிலையம் செல்லும் ஆளுநர் மாலை 4.20 மணிக்கு சென்னைக்கு விமானம் மூலம் செல்கிறாா்.

Related Post