சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்த்த மண்டபத்துக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது சர்ச்சையாக வெடித்த நிலையில், நடிகை கஸ்தூரி அது குறித்து பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார். "எந்த ஜாதியாக இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது" என கஸ்தூரி கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், நடிகை கஸ்தூரி, இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். கஸ்தூரி பேசுகையில், "இளையராஜாவை பற்றிய சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இளையராஜா என்பவர் ஒரு இசைக்கடவுள். அவர் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இளையராஜாவே ஒரு கடவுள் தான். அவரே ஒரு கோயில் தான். இளையராஜாவை கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறுகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
கோவில் கருவறைக்குள் நான் உள்பட யாராலும் உள்ளே செல்ல முடியாது. அவர் எந்த சாதியாக இருந்தாலும் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது. அச்சகர்கள் மட்டுமே கோவில் கருவறைக்குள் செல்ல முடியும். தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். எந்த சாதியினர் அர்ச்சகராக இருந்தாலும் போகலாம்.
இளையராஜாவை அங்கு யாரும் வெளியேற்றவில்லை. அவர் போக முயற்சி செய்யவே இல்லை. அங்கு நில்லுங்கள் என கூறி மரியாதை செலுத்தினர். இதை திரித்துப் பேசும் வன்மம் கொண்டவர்களை கண்டித்துத்தான் முன்பும் நான் பேசினேன். இப்போதும் பேசுகிறேன்" என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் தலைமை வகித்தனர். இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் ஆல்பத்தில் ஆண்டாள் பாசுரங்களை இசைக்கலைஞர்கள் பாடினர்.
முன்னதாக ஆண்டாள் கோயிலுக்கு வந்த இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் சந்நிதி, நந்தவனம், பெரிய பெருமாள் சந்நிதி ஆகியவற்றில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் சென்று இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு ஜீயர்களுடன் இளையராஜா சுவாமி தரிசனம் செய்ய சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்ட் அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார். அப்போது கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என கூறினார். அதை சின்ன ஜீயர் இளையராஜாவிடம் கூறியதும், அவர் அர்த்த மண்டப வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை. இசையமைப்பாளர் இளையராஜா, சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்தபோது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், அதனை ஏற்று அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.