சென்னை: தவெக தலைவர் விஜய், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவி வழங்கியது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை டி.பி. சத்திரம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 500 ஏழை எளிய மக்களை சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, வேட்டி சேலை மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல், குழந்தைகளுக்கு சாக்லெட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார்.
அரசியல் தலைவர்கள், மழை வெள்ள காலங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலத்திட்ட உதவி வழங்குவது வழக்கம். அப்போதுதான் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும், மக்களின் உண்மை நிலை குறித்தும் தலைவர்கள் நேரடியாக உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை தனது அலுவலகத்துக்கு வரவைத்தது தொடர்பாக விமர்சனம் எழுந்தது.
விஜய் Work From Home அரசியல்வாதியாக செயல்படுவதாக நெட்டிசன்கள் கிண்டலாக விமர்சனம் செய்து வருகின்றனர். மக்களை நேரடியாக சந்திக்காத விஜய்க்கு, 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, உடனே முதலமைச்சராகும் ஆசை இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள், விஜய் தனது அலுவலகத்திற்கு மக்களை வரவைத்து நிவாரண உதவிகள் வழங்கியது பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சீமான், "விஜய்யால் களத்தில் போய் நிற்கமுடியாது. காரணம் அவர் போய் அங்கு நின்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட, அவரை பார்க்க வேண்டும் என்று வருகிற கூட்டம் அதிகமாகிவிடும். அதனை சமாளிப்பதே பெரும்பாடாகிவிடும். அப்படி கூட்டம் கூடி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் ஒரு விமர்சனம் எழும்.
விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அதைக் கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது உதவி செய்கிறார். ஆனால் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை அமைச்சர்கள் எல்லாம் கொண்டாடிக் கொண்டிருந்தார்களே? அதை என்ன சொல்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய சீமான், "பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களுக்கு வரி செலுத்துகிறீர்கள்? மாநிலங்களின் வரிதான் மத்திய அரசுக்கு நிதியாக செல்கிறது. அதை தரமுடியாது என்று சொல்லவேண்டும்." என்று தெரிவித்தார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage