சாக்கடை நீரை குடிக்கும் மாடுகள்.. இதோட பாலை குடிச்சா என்னாகும்? வார்னிங்!

post-img

கழிவு நீரை குடித்து, சாக்கடைகளி சுற்றித் திரியும் மாடுகளில் இருந்து பெறக்கூடிய பாலை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதன் மூலம் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அண்மையில் சென்னை அரும்பாக்கம் பகுதியில், தெருவில் நடந்து சென்ற பள்ளிச் சிறுமியை மாடு ஒன்று முட்டித் தாக்கியது. சில நிமிடங்கள் மாடு அந்தச் சிறுமியை புரட்டி எடுத்ததில் அச்சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாடுகளை தெருவில் சுற்றவிடுவதால் தான் இதுபோன்ற மோசமான அசம்பாவிதங்கள் நடக்கிறது என்றும் சென்னையில் மாடுகளை சாலையில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். சென்னை மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையில் இறங்கியது.

சிறுமியை தாக்கிய அந்த மாட்டினை பிடித்து காப்பகத்தில் அடைத்து மாநகராட்சி அதிகாரிகள் அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். அப்போது மாட்டின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நேற்று கூடத்தான் ஒரு லாரி பலர் மீது ஏறியது. இதில் பலர் உயிரிழந்தார்கள். உடனே லாரிகளை தடை செய்துவிடுவீர்களா என்று கேட்டனர். அவர்களுக்கு புரிய வைக்க முயற்சித்தும் கேட்க மறுத்தனர்.இந்நிலையில், இன்று சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேசுகிறார்.

அதில், "இங்கு திரியக்கூடிய மாடுகளைப் பாருங்க.. இங்கு கழிவுநீரை குடிக்கின்றன. இந்த மாடுகளின் பாலை ஹோட்டல்களில் வாங்குகின்றனர். பலர், தாங்கள் கறந்த பசும் பால் வாங்குகிறோம் என நினைத்து இந்த மாடுகளின் பாலை வாங்குகின்றனர். நாம் மாடுகளுக்கு எதிராக இல்லை. ஆனால், உரிமையாளர்கள் மாடுகளை சரிவரப் பராமரிக்க வேண்டும். சும்மா விதண்டாவாதம் செய்யக்கூடாது.

ஒவ்வொரு மாட்டுக்கும் தேவையான தீனி கொடுக்க வேண்டும், தங்குமிடம் அமைக்க வேண்டும், அப்படியே பொறுப்பின்றி விடலாமா? குப்பை போடும்போது பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் வரிப்பணத்தில் தான் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்து, இயந்திரங்களைப் பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. நீங்கள் செய்யும் தவறான செயலால் உங்கள் வரிப்பணம் தான் வீணாகிறது என்பதை உணர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

கழிவு தண்ணீரில் சுற்றித் திரியும் மாடுகளில் இருந்து பெறக்கூடிய பாலை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதன் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இந்த வீடியோவில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அடிப்படையில் கால்நடை மருத்துவம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Post