கடலூர் - சிதம்பரம் ரூட்: நாளை தனியார் பேருந்துகள் இயங்காது.. டோல்கேட் கட்டணத்தை எதிர்த்து போராட்டம்!

post-img
கடலூர்: கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர ரூ.14,090 நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை புதுச்சேரி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அமைக்கும் பணி முழுவதும் முடிவடையாத நிலையில் கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு சுங்க வரி வசூலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. சுங்கக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாலும், உள்ளூர் மக்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாததாலும், பல்வேறு தரப்பு மக்களும், சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டோல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், 60 கி.மீ ஒரு டோல்கேட் என்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். முழுமையாக விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை பணிகள் முடிந்தவுடன் தான் சுங்கக் கட்டண வசூல் துவக்கப்பட வேண்டும் என்றும், 20 கி.மீட்டருக்கும் குறைவான தூரம் செல்பவர்களுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு விதித்துள்ள அநியாய கட்டணத்தைக் குறைத்திட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடலூர் - சிதம்பரம் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர ரூ.14,090 நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் நாளை (டிசம்பர் 23) இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Related Post