கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரு காட்டுயானை புகுந்தது. அந்த காட்டு யானை திடீரென ஒரு வீட்டின் கதவை உடைந்து, உள்ளே இருந்த வாழைத்தாரை லாவகமாக தூக்கிச்சென்றது. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கொக்கியை போட்டு தூக்கிடுவோம் என்பது போல் யானை வாழைத்தாரை தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் பாலக்காடு எல்லை தொடங்கி, அப்படியே மதுக்கரை, நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டிணம், தேவராயபுரம், கலிக்கநாயக்கன்பாளையம், இக்கரைபோளூவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப் பட்டி, தென்கரை, மருதமலை, சுண்டக்காமுத்தூர், எட்டிமடை, மாவுத்தம்பதி , காரமடை, சிறுமுகை என மேட்டுப்பாளையம் வரை மேற்கு தொடர்ச்சிலையை ஒட்டியுள்ள அடிவாரப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வந்துவிடுகின்றன..
குறிப்பாக சொல்வது என்றால், மருதலைப்பகுதிகள், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய வனச்சரக பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் நேற்று இரவு சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரு காட்டுயானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை நோக்கி வேகமாக யானை வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டினர் மறைவான ஒரு இடத்திற்கு சென்றனர். இதையடுத்து காட்டுயானை, அந்த வீட்டின் ஒரு அறையின் கதவை உடைத்து தும்பிக்கையால் உள்ளே இருந்த வாழைத்தார் ஒன்றை லாவகமா தூக்கிக்கொண்டு சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், தலைவனுக்கு தில்லை பார்த்தீங்களா.. எங்க இருந்தாலும் வாழைத்தாரை தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறான் என்று கூறியுள்ளனர்.
யானைகள் நடமாட்டம் ஒருபுறம் எனில் கோவை மாவட்டம் பேரூர் மலையிட பாதுகாப்பு குழும கிராம பகுதியில் கனரக வாகன பயன்பாட்டிற்கு அனுமதி கட்டாயம் என்று கடந்த வாரம் கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்தார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில், "கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டிணம், தேவராயபுரம், கலிக்கநாயக்கன்பாளையம், இக்கரைபோளூவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப் பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிப் பாளையம், சுண்டக்காமுத்தூர், எட்டிமடை, மாவுத்தம்பதி மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய கிராமங்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள் 24.3.2003-ன் படி மலையிட பாதுகாப்பு குழும கிராம பகுதியாக வரையறை செய்யப்பட்டு உள்ளது.
எனவே மேற்கண்ட கிராம பகுதிகளில் தொழிற்சாலை அமைப்பது, கட்டுமானப்பணிகள் மேற்கொள்வது, நில அமைப்பை மாற்றுவது போன்றவற்றிற்கு மலையிட பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி பெறு வது கட்டாயம். அதை மீறி செயல்படுவது சட்டப்படி குற்றச்செயலாகும். எனவே பேரூர் தாலுகாவில் உள்ள மலையிட பாதுகாப்பு குழும கிராம பகுதியில் கனரக வாகனங்களை பயன்படுத்தி நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தாசில்தாரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மேலும் பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மண் எடுக்க பயன்படுத்தப்படும் கனரக எந்திரங்களாக பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களை முறையாக பதிவு செய்யவும், பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage