அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நாளை முக்கிய தீர்ப்பு

post-img

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத் துறை வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்க பிரிவினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர் படுத்தப்பட்டார்.அப்போது அவரிடம் அமலாக்க பிரிவினர் தாக்கல் செய்த மனு கிடைத்ததா என நீதிபதி கேள்வி எழுப்பினார் அதற்கு செந்தில் பாலாஜி இல்லை என தெரிவித்ததை அடுத்து மனுவை கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளும்படி நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடந்த வாதத்தில் வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் போக்குவரத்துக் கழக நியமனங்களுக்கு பெற்ற தொகை குறித்த முழு விவரங்களை பெற வேண்டி உள்ளது என்றும் குறிப்பிட்ட அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், அமலாக்க பிரிவினர் விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜி காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ கடந்த 13 ஆம் தேதி காலை 7 மணி முதல் 14ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார். மேலும், இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் முதன்மை அமர்வு நீதிபதி அல்லியிடம் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்க பிரிவின் துணை இயக்குனர் கார்த்திக் தாசரி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் கைது வரைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தனது வாக்குமூலத்தை அளித்தார்.

இறுதியாக அமலாக்கப் பிரிவினர் 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு குறித்து செந்தில் பாலாஜியின் விருப்பம் குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விருப்பமில்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, உயர் நீதிமன்ற உத்தரவை படித்த பிறகு இந்த வழக்கின் மீதான உத்தரவை நாளை (ஜூன் 16) பிறப்பிப்பதாக கூறி, தீர்ப்பை தள்ளிவைத்தார்.

 

Related Post