பைக் டாக்ஸி விவகாரம்.. உடனே அபராதமா? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

post-img
சென்னை : பைக் டாக்சி விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பைக் டாக்ஸிகள், விதிமீறல்களில் ஈடுபட்டால் முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும், அதன் பின்பு அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பைக், ஸ்கூட்டி போன்ற இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல முடியும் என விதிகள் உள்ளன. சிலர் இந்த வாகனங்களை டாக்சி போன்ற வடிவில் பயன்படுத்துகின்றனர். ஒருவர் மட்டுமே செல்லும்போது கார்கள் மற்றும் ஆட்டோக்களில் சென்றால் நேரம் அதிகம் எடுத்து கொள்ளும், அதே சமயம் பணமும் அதிகம் செலவாகும். அதனால் அதிகமான மக்கள் பைக் டாக்சிகளை தேர்வு செய்கிறார்கள். ராபிடோ, ஓலா போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், சாலை போக்குவரத்து சங்கம் சார்பில், போக்குவரத்துத் துறை ஆணையருக்குப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை சோதனை செய்யுமாறு தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் விதிகளை மீறி பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனி நபர்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை எப்படி வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும் என்று புகார் எழுந்துள்ளதால் போக்குவரத்து கமிஷனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உன்னிப்பாக கவனிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாராவது விதிகளை மீறுவதைக் கண்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பைக் டாக்ஸிகள் தடை செய்யப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்ஸிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பைக் டாக்சி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம். காப்பீடு இல்லாமல் பைக் டாக்சிகள் இயங்குவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பைக் டாக்சியில் பயணிப்போர் இறந்தால் காப்பீடு வழங்குவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பைக் டாக்சிகளில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி இன்சூரன்ஸ் போடப்பட்டிருக்க வேண்டும். பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது. உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பைக் டாக்ஸிகள், விதிமீறல்களில் ஈடுபட்டால் முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பின்பு அபராதம், வானகங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஆட்டோ ஓட்டுநர்கள் - பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Post