லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்கும் அரசு ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்.. ஹைகோர்ட் தீர்ப்பால் என்னாகும்?

post-img
சென்னை: லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்கும் அரசு ஊழியர்கள் எளிதாக தப்பித்துவிட முடியாது. அரசு ஊழியர்கள் வாங்கும் சொத்துக்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது. ஏனெனில் அரசு ஊழியர்கள் தொடர்பான வழக்கில் முக்கியமான உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்பட அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டப்படி வெளியிடலாம். தகவல் அறியும் உரிமை சட்டப்படி அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை யாரும் அறிய முடியும் என்கிற நிலை வரப்போகிறது. ஏனெனில் லஞ்சம் வாங்கியும், ஊழல் செய்தும் சொத்து சேர்க்கும் அரசு ஊழியர்கள் குறித்து சந்தேகப்படும் எவரும் அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டப்படி இனி அறிய முடியும். கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பட்டினத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. காவிரிப்பட்டினம் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில், “நான் திராவிடர் கழகத்தில் இணைந்து சமூக சேவைகளை செய்து வருகிறேன். கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளர் காளிபிரியன் என்பவரது சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய விரும்பினேன். அதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், சொத்து, கடன் உள்ளிட்டவை அரசு ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள் என்று கூறி அதை தர மறுத்து பொது தகவல் அலுவலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மாநில தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தும் பலன் இல்லை. எனவே, உதவி பொறியாளரின் சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும்”.. இவ்வாறு சீனிவாசன் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில். உதவி பொறியாளர் காளிபிரியன் பணியில் சேர்ந்த தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரையிலான பணியின் விவரம், அவரது பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்து, அவர் பெற்றுள்ள கடன், ஊதியம் உள்ளிட்ட விவரங்களை மனுதாரர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறார். ஆனால், அரசு ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களை வழங்க முடியாது என்று அதிகாரிகள் பதில் அளித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, உதவி பொறியாளர் காளிபிரியனிடம் இதுகுறித்து நீர்வளத்துறை பொது தகவல் அலுவலர் கடந்த ஏப்ரல் 4-ந்தேதி விவரம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், தன்னுடைய விவரங்களை வழங்கக்கூடாது என்று மே 10-ந்தேதி பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். ஆனால், மனுதாரர் கேட்டுள்ள சில விவரங்கள் உதவி பொறியாளரின் தனிப்பட்ட விவரம் என்றாலும், பொது ஊழியரின் சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்களின் ஆய்வுக்கு உட்படுத்துவதை தடுக்க முடியாது. அதேநேரம், அதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அதாவது பணியில் சேர்ந்த நாள், பணியின் விவரம், பதவி உயர்வு உள்ளிட்ட தகவலை வழங்குவதால் பொதுஊழியரின் பணிக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும். எனவே, பணி பதிவேட்டில் உள்ள விவரங்கள் எதற்காக கேட்கப்படுகிறது? என்பதையும் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்கள் பரிசீலிக்க வேண்டும். அதேநேரம், அரசு ஊழியர்களின் விவரங்களை வழங்க முடியாது என்று கூறக்கூடாது. ஒரு வேளை தர மறுத்தால், அதற்கான காரணங்களை கூற வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை, உதவி பொறியாளரின் தனிப்பட்ட விவரம் என்பதால், அதை தர முடியாது என்று பொது தகவல் அலுவலர் கூறியிருப்பதை ஏற்க முடியவில்லை. அரசு ஊழியர் பணி பதிவேட்டில் உள்ள பணியில் சேர்ந்த நாள், பணியிட மாற்றம், ஊதி உயர்வு, பணியில் ஏதாவது தண்டனை பெற்று இருந்தால் அதன் விவரம், ஓய்வு பெறும் நாள் ஆகியவை தனிப்பட்ட விவரம் கிடையாது. அதுமட்டுமல்ல அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன் விவரங்களும் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரம் இல்லை. ஒருவர் அரசு பணியில் சேர்ந்து பொது ஊழியராகி விட்டால், அவர் பொதுமக்களின் கண்காணிப்பில் உள்ளார் என்பதை ஏற்க வேண்டும். தங்களது விவரங்களை பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளக்கூடாது என்று நினைக்கக்கூடாது. மனுதாரர் கேட்ட விவரங்களை தர மறுத்த கிருஷ்ணகிரி பொது தகவல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரரின் விண்ணப்பத்தை மீண்டும் அவர் பரிசீலிக்க வேண்டும். மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை மாநில தகவல் ஆணையர் 2 மாதங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்ன என்றால் ஒருவர் அரசு பணியில் சேர்ந்து பொது ஊழியராகி விட்டால், அவர் பொதுமக்களின் கண்காணிப்பில் உள்ளார் என்பதை ஏற்க வேண்டும். அடுத்ததாக அரசு ஊழியர்கள் தங்களது விவரங்களை பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளக்கூடாது என்று நினைக்கக்கூடாது என்பது தான். இந்த தீர்ப்பின் படி பார்த்தால், இனி அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை யாரும் அறிந்து கொள்ள முடியும். அவர்கள் முறைகேடாக சொத்து சேர்த்தார்களா என்பதை எளிதாக கண்டுபிடிக்கவும் முடியும்.

Related Post