டெல்லி: சிரியாவில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சிக் குழு தொடர் தாக்குதல்களை நடத்தி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியது. அத்துடன் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகவும் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிரியாவை விட்டு தப்பி ஓடிய அதிபர் பஷார் அல் அசாத், விமான விபத்தில் கொல்லப்பட்டுவிட்டதாக நம்பப்படுகிறது. அதிபர் பஷார் அல் அசாத் தப்பி ஓடிய விமானத்தை கிளர்ச்சிக் குழு சுட்டு வீழ்த்தியிருக்கலாம்; அதில் அசாத் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சிக் குழு , சிரிய அதிப பஷார் அல் அசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியைத் தொடங்கி முக்கிய நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. இதன் உச்சகட்டமாக தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிக் குழு கைப்பற்றிவிட்டது. இந்த கிளர்ச்சியின் மூலம் 54 ஆண்டுகள் நீடித்த அசாத் குடும்பத்தின் ஆட்சிக்கு கிளர்ச்சிக் குழு முடிவு கட்டிவிட்டது.
சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே பஷார் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிக்குழு தீவிரம் காட்டி யுத்தம் நடத்தி வந்தது. சிரியாவை ஆதரித்த ஈரான், ரஷ்யா நாடுகள் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களில் கவனம் செலுத்த சிரியா கைவிடப்பட்டது. இதனை வாய்ப்பாக பயன்படுத்திய கிளர்ச்சிக் குழு அடுத்தடுத்து சிரியாவின் நகரங்களைக் கைப்பற்றி அசாத் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிடது.
ஹோமஸ் நகரை கைப்பற்றிய கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸ் தலைநகரை எளிதாக தங்கள் வசமாக்கியது. இதனால் சிரியா அதிபர் அசாத் உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் சிரியா அதிபர் அசாத் உள்ளிட்டோர் தப்பிச் சென்ற விமானம் திடீரென ரேடார் கண்காணிப்பில் இருந்து மாயமாகி இருக்கிறது. மேலும் அசாத் பயணித்த விமானத்தை கிளர்ச்சிக் குழு சுட்டு வீழ்த்தியிருக்கலாம்; இதில் அசாத் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அசாத் மரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சிரியா ஆட்சிக் கவிழ்ப்பால் சர்வதேச அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage