சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான தேர்வு மையம் தேர்ந்தெடுக்கவும் மற்றும் சான்றிதழை பதிவேற்றம் செய்யவும் இன்று (டிசம்பர் 18) கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 2 மற்றும் 2ஏ ல் அடங்கிய பதவிகளின் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 20 அன்று வெளியிட்டது. குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14 ஆம் அன்று முற்பகல் நடைபெற்றது.
இந்த தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 7,93,966 தேர்வர்களில் 5,83,467 தேர்வர்கள் முதல்நிலை தேர்வு எழுதினர். குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கு அணுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி வெளியிடபட்டது.
குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மொத்தமாக குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு 21,822 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவை வெவ்வேறு நாட்களில் நடக்கின்றன. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முதல் தாள் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 தேர்வு இரண்டாம் தாள் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 ஏ இரண்டாம் தாள் பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கிறது.
குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் முதன்மை எழுத்துத் தேர்விற்கான கட்டணம் ரூ.150 வீதம் இரண்டு முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணத்தை தங்களது ஒருமுறைப் பதிவின் (One Time Registration) மூலமாக செலுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்க, தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதோடு, தமிழ் தகுதித் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான சான்றிதழ் பதிவேற்றம், தேர்வு மையம் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றை பதிவேற்ற இன்று (டிசம்பர் 18) கடைசி நாள். இதனை நினைவூட்டியுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு-2 (தொகுதி 2A பணிகள்) தாள் II-ற்கான தேர்வு மையத்தை தேர்வு செய்வதற்கு இன்று கடைசி நாள். 87% தேர்வர்கள் தேர்வு மையத்தை தேர்வு செய்துவிட்டனர். எனவே தேர்வர்கள் கடைசி நிமிடம் வரை காத்திராமல், உடனே தேர்வு மையத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) தமிழ் தகுதித் தேர்விற்கு விலக்கு பெற சான்றிதழை பதிவேற்றம் செய்தலுக்கான கடைசி நாள் இன்று. 75% தேர்வர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்து விட்டனர். எனவே தமிழ் தகுதித் தேர்விற்கு விலக்கு கோரிய மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் கடைசி நிமிடம் வரை காத்திராமல் உடனே சான்றிதழை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சான்றிதழை குறிப்பிட்ட படிவத்தில் பதிவேற்றம் செய்யாத மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு, தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.