சென்னை பொதுக் கழிப்பறையில் வழுக்கி விழுந்து இளைஞர் பலி..

post-img

சென்னை: உரிய பராமரிப்பு இல்லாத மாநகராட்சி கழிப்பிடத்தை பயன்படுத்த சென்ற இளைஞர் பலியான நிலையில்அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது.


இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை செயலாளர் ஊடகங்களுக்கு விடுக்கும் செய்தி குறிப்பு: உரிய பராமரிப்பு இல்லாத மாநகராட்சி கழிப்பிடத்தை பயன்படுத்த சென்ற இளைஞர் மணிகண்டன் பலி. பொதுக் கழிப்பிடங்களை முறையாக பராமரித்திடவும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார்.
ஆணையரிடம் கொடுக்கப்பட்ட மனுவின் விவரம்: பெருநகர சென்னை மாநகராட்சி, 62வது வட்டம், சிந்தாரிப்பேட்டை, எண்.80 பம்பிங் ஸ்டேஷன், அருணாச்சலம் தெருவில் வசித்து வந்த இந்து ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த திருமிகு.கு.மணிகண்டன் த/பெ குபேந்திரன், (வயது 28), ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு சுமார் 8 மணி அளவில் அதே பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தை உபயோகிக்க சென்றுள்ளார்.


மாநகராட்சியின் பொதுக் கழிப்பறையானது முழுமையாக பராமரிப்பு செய்யாமலும் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினாலும் பொதுக் கழிப்பறையை பயன்படுத்த சென்ற மணிகண்டன் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு, வலிப்பு வந்து நினைவில்லாமல் விழுந்து கிடந்திருக்கிறார். ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மூன்று நாள் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலன் அளிக்காமல் 22.08.2023 செவ்வாய்கிழமை காலை 9.10 மணிக்கு மருத்துவமனையில் மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.


சிந்தாரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் உள்ள இரண்டு பொதுக் கழிப்பிடங்களை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மற்றும் இப்பகுதிக்கு வரும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பொதுக் கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளில் அஞ்சலை என்ற முதியவர் உயிரிழந்ததாகவும், கழிப்பறையைப் பயன்படுத்த செல்லும் போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கால்களில் காயம் ஏற்பட்டு நரம்பு கிழிந்ததன் காரணமாக அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


பெருநகர சென்னை மாநகராட்சி கழிப்பறைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப அப்பணிகள் அமையவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதன் காரணமாகத்தான் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த சென்ற இளைஞர் மணிகண்டன் உயிரிழக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, சிந்தாரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு பணிகளை உடனே விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சென்னையில் வாகனம் நிறுத்தும் இடங்கள்.. வரப்போகுது புதிய முறை.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் முக்கிய தகவல்
ரிச்சி தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் பொதுக் கழிப்பறைகளையும் விரைந்து சரிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுக் கழிப்பறையை பெண்கள், முதியவர்கள் ஆகியோர் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தனித்தனி அறைகளை ஏற்படுத்த வேண்டுகிறோம். உயிரிழந்த மணிகண்டன் தாயார் ஷீலாதேவி ஆதரவு ஏதுமற்று உள்ளார். அவருக்கு உரிய இழப்பீடு வழங்கி ஆதரவளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Related Post