நிலத்தை விற்கும்போது கவனம்.. அடுக்குமாடி வீட்டையே ஒருத்தர் ஆட்டைய போட்டுட்டாரே.. இது கோவை கொடுமை

post-img

சென்னை: பத்திரங்களை போலியாக தயார் செய்யும் மோசடி கும்பல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், கோவையில் நடந்த மோசடி சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணயை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் பெருகி வருகிறது.. உயர் பதவியிலுள்ள அரசு துறை அதிகாரிகளே லஞ்ச மோசடியில் கைதாவது மலிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பதிவுத்துறை, வருவாய்த்துறைகளில் இதுபோன்ற புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

பத்திரங்கள்: போலியான பத்திரங்களை, ஒரிஜினல் போலவே தயாரித்து மோசடி செய்து, நில அபகரிப்பு முதல் லஞ்சம் பெறுவது வரை ஏராளமான குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இவைகளை களைவதற்கான முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.
உயர் அதிகாரிகளும், பெண் அதிகாரிகளும் என பாரபட்சமின்றி கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. பொதுவெளியில் லஞ்சப்பணத்துடன் பிடிபட்டு கைதானாலும்கூட, மீண்டும் மீண்டும் சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை விடவேயில்லை. இதற்கு நடுவில் சார்பதிவாளர்கள் ஆங்காங்கே மிரட்டப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நேற்று முன்தினம், போலி ஆவணம் தயாரித்து, காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை விற்க வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்திருந்தனர். அதற்குள் கன்னியாகுமரியில் ஒரு கொடுமை நடந்தது..

கன்னியாகுமரி: நேற்றுகூட சுண்டவிளையை சேர்ந்த ஜஸ்டஸ் மார்ட்டின் என்பவர் தன்னுடைய 1 சென்ட் நிலத்தை, பதிவு செய்யுமாறு கருங்கல் சார்பதிவாளர் அரிகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சார் பதிவாளர், புதிய விதிமுறைகள் அமலின்படி, நிலத்தை நேரடியாக பதிவு செய்ய முடியாது, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஆய்வு நடத்தி அறிக்கை தந்த பிறகுதான் பதிவு செய்து தர முடியும் என்றாராம்.
இந்த ஆத்திரத்தில், சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்த ஜஸ்டிஸ், பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை அரிகிருஷ்ணன் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்கள் மீது ஊற்றிவிட்டு, தனக்கு தானே தலையிலும் ஊற்றிக் கொண்டார். உடனே தீப்பெட்டியை எடுத்து ஜஸ்டிஸ் மார்ட்டின் பற்ற வைத்தார். ஆனால், அதற்குள் அங்கிருந்தவர்கள் ஜஸ்டிஸ் மார்ட்டினை வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பு: இதோ இன்னொரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.. டாடபாத் பகுதியை சேர்ந்த அருண் என்பவருக்கு, சிவானந்தா காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு சொந்தமாக உள்ளது.. இதனை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.. அப்போது, ஜெகநாத சிங் என்பவர், தான் கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கும் பணி செய்து வருவதாகவும், வீட்டை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாகவும் கூறி அருணின் வீட்டு சாவியை வாங்கியிருக்கிறார்.

ஆனால், போலி ஆவணங்கள் தயாரித்த ஜெகநாத சிங், அந்த வீட்டை பிரவீன் என்பவருக்கு ரூ.10 லட்சத்துக்கு விற்றுவிட்டார்.. இதுகுறித்து புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்ததுடன், தலைமறைவான ஜெகநாத சிங்கை பிடிக்க தனிப்படையும் அமைத்தனர். நேற்றைய தினம், மலுமிச்சம்பட்டியில் பதுங்கியிருந்த ஜெகநாத சிங்கை கைது செய்து விசாரித்தனர்.
மோசடி வழக்கு: அப்போதுதான் இவர் மீது ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு உள்ளதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. வீட்டை பார்க்க வேண்டும் என்று கூறி, சாவியை வாங்கி சென்றவர், போலி ஆவணம் தயாரித்து வீட்டை விற்ற சம்பவம் கோவையில் பெருமம் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Related Post