டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் - பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தியதல் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவின் 2 எம்பிக்களின் மண்டை உடைந்த நிலையில் ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக அளித்த புகாரில் அதனை போலீஸ் நிராகரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி பேசியதாக கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று காலையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் அமித்ஷாவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
அதேபோல் காங்கிரஸ் தான் அம்பேத்கரை அவமானப்படுத்தி உள்ளது. தற்போது அமித்ஷாவுக்கு எதிராக திட்டமிட்டு எடிட் செய்த வீடியோவை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன என்று பாஜக எம்பிக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருதரப்பினரும் போட்டி போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது திடீரென்று இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரின் தலையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ராகுல் காந்தி தான் சந்திர சாரங்கியை தள்ளிவிட்டதாகவும், இதனால் தான் அவர் காயமடைந்ததாகவும் பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்பி அனுராக் தாகூர் சார்பில் நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் ராகுல் காந்தி மீது பிஎன்எஸ் சட்டம் 109 (கொலை முயற்சி), 115 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 117 (வேண்டுமென்றே தாக்கி காயப்படுத்துதல்), 125 (மற்றவர்களின் உயிர் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது), 131 (குற்றவாளிகளை பயன்படுத்துதல்), 351 (குற்றம்சார்ந்த மிரட்டல்), 3(5) (குற்றம் செய்யும் நோக்கத்துடன் ஒன்றாக கூடுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் கொலை முயற்சி பிரிவை தவிர்த்தனர். மற்றபடி பிற 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க பாஜகவினரால் தனக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் அவை தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளதோடு, காங்கிரஸ் சார்பிலும் பாஜகவினருக்கு எதிராக நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.