ரஷ்யா-உக்ரைன் போரில் படுகாயமடையும் வடகொரிய வீரர்கள்! பயிற்சியில்லாதவர்களை அனுப்பினாரா கிம் ஜாங் உன்!

post-img
மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட வடகொரிய வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும், உரிய பயிற்சியில்லாத வீரர்களை அதிபர் கிம் ஜாங் உன் அனுப்பிவைத்தாரா? என்கிற சந்தேகம் எழுவதாகவும் அமெரிக்கா கிண்டலடித்து வருகிறது. போர் பின்னணி: ரஷ்யாவுடன் மோதுவது உக்ரனாக தெரிந்தாலும், அதன் பின்னால் இருப்பது நேட்டோதான். அமெரிக்கா உருவாக்கியதுதான் இந்த நேட்டோ. நேட்டோவுக்கு பிரதான எதிரி, ரஷ்யாவும், சீனாவும், வடகொரியாவும்தான். ரஷ்யாவுக்கு பக்கத்தில் இருக்கும் குட்டி நாடுதான் உக்ரைன். ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்தது. ஆனால் 1990களில் இது பிரிந்து உக்ரைனாக மாறியது. அப்போதிலிருந்து ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் பஞ்சாயத்து தொடர்கிறது. நேட்டோ: உக்ரைன் பிரிந்து வந்ததையடுத்து, அந்நாட்டில் தன்னுடைய ஆதரவு பெற்ற நபரான ஜெலன்ஸ்கியை அமெரிக்கா அதிபராக ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. ஜெலன்ஸ்கி ஆட்சிக்கு வந்தவுடன் அவர் செய்த முதல் வேலை, நேட்டோவை உக்ரைன் எல்லையில் நிலை நிறுத்துவதுதான். மேலே குறிப்பிட்டதைபோல, உக்ரைன் ரஷ்யாவுடன் தனது எல்லையை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில், நேட்டோ உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டால் அது ரஷ்யாவுக்குதான் தலைவலி. எனவே, ஜெலன்ஸ்கியுடன் ரஷ்யா பேசி பார்த்தது. ஆனால், எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை. இறுதியாக நேட்டோ ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்தும் போட்டுவிட்டது. இதுதான் போரின் தொடக்கப்புள்ளி. போர்: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் ஏறத்தாழ 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் மக்கள்தொகை வெறும் 3.9 கோடிதான். தமிழ்நாட்டை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு. ராணுவ பலத்திலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கிடையாது. ஆனால், 3 ஆண்டுகள் வரை ரஷ்யாவுடன் போர் செய்து வருகிறது. அப்படியெனில் அமெரிக்கா, உக்ரைனுக்கு ஏராளமான அளவில் உதவி செய்து வருகிறது என்று அர்த்தம். இந்த உதவி ரஷ்யாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்திவிட்டது. ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடிதான். உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவை கட்டி ஆள இந்த மக்கள் தொகை பத்தாது. எனவேதான் வடகொரியா ரஷ்யாவுக்கு உதவி செய்திருக்கிறது. வடகொரியாவிலிருந்து சுமார் 10,000 வீரர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டை செய்ய உக்ரைன் எல்லைக்கு அனுப்பப்பட்டனர். இவற்றில் சில நூற்றுக்கணக்கான வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இது பயிற்சி இல்லாத வீரர்களை வடகொரியா அனுப்பிட்டதோ என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளது. குறைந்தபட்சம் 30 வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்த செய்தியை AFP வெளியிட்டிருக்கிறது. டிரம்ப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், உக்ரைனுக்கான உதவி அதிகரிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் 2025ல் ரஷ்யா-உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post