"சட்டம் தன் கடமையை செய்யும்" அல்லு அர்ஜுன் விவகாரம்..தெலுங்கானா சிஎம் ரேவந்த் ரெட்டி சொன்னது இதுதான்

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் இன்று கைது செய்தனர். மாலையே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அந்த கைதுக்குப் பின்னால் தெலுங்கானா முதல்வர் ரேவ்ந்த் ரெட்டி இருப்பதாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா 2 ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து இன்னும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அல்லு அர்ஜுன் கைது: அதேநேரம் டிச. 4ம் தேதி மாலை படத்தின் சிறப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் திரையிடப்பட்ட நிலையில், அங்குள்ள சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் சென்றார். திடீரென அல்லு அர்ஜுன் சென்ற நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கிய தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அல்லு அர்ஜுன் திடீரென கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும்: இதற்கிடையே நடிகர் அல்லு அர்ஜுன் கைது தொடர்பாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதில் யாருடைய தலையீடு அல்லது அழுத்தமும் இல்லை என்று தெரிவித்த ரேவந்த் ரெட்டி, சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த கைது விவகாரத்தில் எனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை.. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் சட்டப்படியே போலீசார் அல்லு அர்ஜுன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். பின்னணி: புஷ்பா 2 வெற்றியைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அல்லு அர்ஜுன் மேடையிலேயே முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயரை மறந்தார். அதன் பிறகு ஒருவாறு தண்ணீர் எல்லாம் குடிப்பது போலக் குடித்துச் சமாளித்தார். அல்லு அர்ஜுன் கைதை தொடர்ந்து இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாகவே அல்லு அர்ஜுன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வந்த நிலையில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மோகன் பாபு: அதேபோல ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒரு சலசலப்பும் ஏற்பட்டது. அதாவது பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபுவுக்கும் அவரது மகனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. அது தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது மோகன் பாபு மைக் வீசி தாக்கினார். இதுவும் அங்குச் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான கேள்விக்கு, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். அமைச்சரவை விரிவாக்கம்: தெலுங்கானா அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி, "இதுபோல தகவல் தான் பரவி வருகிறது. உண்மையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் திட்டம் இல்லை.. இது தொடர்பாக எந்தவொரு விவாதம் கூட இல்லை. டெல்லியில் இப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. தெலுங்கானாவிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மேலும், அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர், துணை முதல்வர் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்க வேண்டும். இப்போதைக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை" என்றார்.

Related Post