சென்னை: புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்று வெளியாகிவரும் தகவலையடுத்து, டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதனால், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு தரப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியிலும் இந்த சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன.. வார விடுமுறைகளை கணக்கிட்டு ஏராளமானோர் புதுச்சேரியில் குவிந்துவிடுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே, கடந்த2017ல் டூவீலரில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்த அறிவிப்பானது பெறப்பட்டது.
மீண்டும் அமல்: கடந்த 2022 நவம்பரில் மறுபடியும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டது. ஹெல்மெட் இல்லாமல் பயணித்தால் ரூ.1000 அபராதம், 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என அறிவிக்கப்பட்டது.. இதற்கும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டனர். இப்படிப்பட்ட சூழலில், வருகிற 2025 ஜனவரி 1 முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கபோலீசார் திட்டமிட்டுள்ளனர். மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
புத்தாண்டு விரைவில் வரவுள்ள நிலையில், இப்படியொரு அறிவிப்பு புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கண்காணிப்பு பணிகளிலும் போக்குவரத்து போலீஸார் இறங்கியுள்ளனர். மேலும், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.. அத்துடன், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஹெல்மெட் கட்டாயம்: இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்று சில புரளிகள் திடீரென சோஷியல் மீடியாவில் கிளம்பின.. இதையடுத்து, டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய எச்சரிக்கை ஒன்றை அறிக்கை மூலம் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையில் உள்ளதாவது: "தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில், ஆண்டுக்கு, 40 சதவீதம் பேர், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இது, 2015ல் இருந்து கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு: போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் விதிமீறலுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். எனினும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.கே.ராஜேந்திரன் என்பவர், 'ஹெல்மெட் கட்டாயம் என்பதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை' என்று, பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், 'அரசு வெறும் உத்தரவு போட்டால் மட்டும் போதாது' என, அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கடும் நடவடிக்கை: இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் இருந்து அரசு விலக்கு அளித்து இருப்பதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.