தவெகவில் பொருளாளர் பதவி? ஆதவ் அர்ஜுனாவுக்கு ராஜீவ்காந்தி வாழ்த்து? என்ன நடக்கிறது?

post-img

சென்னை: விஜய் முன்கூட்டியே கட்சி ஆரம்பித்திருந்தால் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்திருக்கமாட்டார் என்று திமுக மாணவரணிச் செயலாளர் ராஜீவ்காந்தி தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் 'எல்லோருக்குமான தலைவர்' நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டார். அந்தப் புத்தகத்தை ஆதவ் அர்ஜுனா நிறுவனம் தயாரித்திருந்தது. நூல் வெளியீட்டு விழாவில் அது எப்படி தயாரானது என்பது பற்றி விளக்கிப் பேச வந்த ஆதவ் அர்ஜுனா, 'வேங்கை வயல்' கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். அந்தக் கிராமத்திற்கு விஜய் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், 'ஒரு சாதாரண கான்ஸ்டபிள் நினைத்தால் அதைக் கண்டுபிடித்துவிட முடியும். அந்த வழக்கில் இன்னும் திமுக அரசு யாரையும் கைது செய்யாமல் இருக்கிறது' என்று தெரிவித்தார். அவரது பேச்சு பற்றி பதிலடி கொடுத்துள்ள திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, ஆதவ் அர்ஜுனா பிறப்பதற்கு முன்பே பெரியாருடன் இணைந்து பயணித்தவர் அம்பேத்கர். அவருடைய கொள்கையை தமிழ்நாட்டில் வீதி வீதியாகக் கொண்டு போய் சேர்த்த இயக்கம் திராவிட இயக்கம்.
திமுகவில் இன்றைக்கும் மாவட்டச் செயலாளருக்கு அடுத்துள்ள துணைச் செயலாளர் பதவியை தலித் ஒருவருக்குத்தான் வழங்க முடியும். கிளைச் செயலாளர் வரை இதுதான் கட்சியின் விதி. அதை எல்லாம் படித்திருக்கிறாரா இந்தத் தேர்தல் வியூக பகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ராஜீவ்காந்தி அளித்துள்ள பேட்டியில், "அம்பேத்கரைப் படித்த யாரும் பேச்சுக்குக்கூட இவருடன் காஞ்சி சங்கராச்சாரியாரை ஒப்பிட்டுப் பேச மாட்டார்கள். மெத்தப் படித்த மேதாவி என்று சொல்லிக் கொள்ளும் அர்ஜுன் ஆதவ் அதைச் செய்திருக்கிறார். எதையுமே முழுமையாகப் படிக்காமல் வெறுமனே அம்பேத்கர் போட்டோ வைத்தால் தலித் மக்கள் வாக்குகளைப் பெற்றுவிடலாம். சங்கராச்சாரியாரைச் சொன்னால் பிராமணர்கள் ஓட்டுகளைப் பெற்றுவிடலாம் என்பது எல்லாம் தேர்தல் வியூகம் அல்ல.

உதயநிதி ஸ்டாலினைக் கட்சிக்குள் கொண்டுவரமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அவர் சேப்பாக்கம் தொகுதியில் நிறுத்தப்பட்ட போது மீண்டும் இதை ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அதற்கு ஸ்டாலின், 'கட்சி அவரை நிறுத்தவேண்டும் என நினைக்கிறது. எனவே போட்டியிட வைக்கிறோம். ஒருவேளை மக்கள் ஸ்டாலின் மகன் என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தோற்கடிக்கலாம்' என்று சொன்னார்.
கடந்த 2021 தேர்தலில் ஐ.பெரியசாமிக்கு அடுத்த அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் உதயநிதி. அவரைப் போய் மன்னர் ஆட்சி, வாரிசு எனச் சொல்கிறாரே? அவருக்கு மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டு நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்பது தெரியுமா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

விஜய்யை வேங்கைவயல் கிராமத்திற்குப் போகவேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா அறிவுரை அளித்தது குறித்துப் பேசிய ராஜீவ்காந்தி, "அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே இந்த ஐடியாவை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அம்மாவைப் பார்த்து கட்சி ஆரம்பித்தவருக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாது. ஒருவேளை விரைவில் தவெக பொருளாளராக ஆதவ் அர்ஜுனாவுக்குப் பதவி கிடைக்கலாம். அதற்கு என் வாழ்த்துகள். விஜய் முன்கூட்டியே கட்சி தொடங்கி இருந்தால் ஆதவ் அந்தக் கட்சிக்குத்தான் போய் இருப்பார். அவர் தாமதமாக ஆரம்பித்ததால் விசிகவுக்கு வந்துவிட்டார்" என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.

Related Post