சென்னை: மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவைக்கான டோக்கன் குறித்து சென்னை போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய, டிசம்பர் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய, இந்த டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு பத்து டோக்கன்கள் என்ற வீதத்தில், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்களுடைய இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, வயது சான்று, இரு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன்களை டிசம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை உரிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக 42 மையங்களில் வார விடுமுறையின்றி அனைத்து நாட்களும் காலை 8 மணி முதல் இரவ 7.30 மணி வரை வழங்கப்படும். இவை வழக்கம் போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் வழங்கப்படும். இதற்கு குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ கல்விச் சான்றிதழ்/ வாக்காளர் அடையாள அட்டை), 2 கலர் போட்டோக்கள் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அது போல் அரசு பேருந்துகளில் போலீஸார் இலவச பயணம் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசு பேருந்துகளில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸார் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம். இதற்கான உத்தரவானது உள்துறை வழங்கியுள்ளது. எனினும் இது தொடர்பாக உள்துறைக்கும் போலீஸுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸுக்கு இலவவச பஸ் பாஸ் அளிக்குமாறு போக்குவரத்துத் துறைக்கு உள்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, மடிக்கணினி, பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து பயணத்தின் மூலம் மட்டுமே பெண்கள் மாதந்தோறும் ரூ 1000 மிச்சப்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சலுகை மூத்த குடிமக்களுக்கும் கொடுக்கப்படுகிறது.