சென்னை: திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் மீது நாம் தமிழர் கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை இடும்பாவனம் கார்த்திக், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும், பொய் வழக்கு பதிந்து தாக்குதல் நடத்துவதாகவும் எஸ்பி வருண்குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. நாம் தமிழர் கட்சியினர் தன் குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாகவும், மிரட்டி சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருண்குமார் கூறியிருந்தார்.
இதற்கு பதில் கூறிய சீமான், என்னுடைய குடும்பம் குறித்தும் பலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகிறார்களே.. அது எல்லாம் உங்களுகு தெரியாதா.. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து இந்த விவகாரம் சற்று அமைதியான நிலையில், நேற்று வருண்குமார் பேசிய கருத்து மீண்டும் நாம் தமிழர் கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதாவது சண்டிகரில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான 5வது மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க ஐபிஎஸ் அதிகாரி வருண் குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வருண்குமார் ஐபிஎஸ், 'என் குடும்பம் சைபர் கிரைம் மற்றும் இணையதள மிரட்டல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் இயக்கம் நாம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் ஆகும்.
நாம் தமிழர் கட்சியால் நானும், என் குடும்பத்தினர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். என் குடும்பப் புகைப்படங்களை நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் பதிவிட்டிருந்தார்கள். இது குறித்து 2 எப்ஐஆர்கள் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அது போல் இணையதளத்தில் அவர்கள் போட்ட பதிவுகளை நீக்க கோரியும் அவை நீக்கப்படவில்லை” என்று பேசியிருந்தார்.
உடனே இதற்கு பதில் அளித்த சீமான், நாம் தமிழர் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறோம். எதனை வைத்து வருண்குமார் எங்க கட்சியை பிரிவினை வாதம் என்கிறார். அவர் எப்படி அடிப்படை தகுதி கூட இல்லாமல் ஐபிஎஸ் ஆனார், தமிழ் மற்றும் தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும். அதிகபட்சம் உன்னால் என்ன பண்ண முடியும்?.. நீ ஒரு ஐபிஎஸ் தான்.. என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வருண்குமார் ஐபிஎஸ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை இடும்பாவனம் கார்த்திக் சார்பில், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும், பொய் வழக்கு பதிந்து தாக்குதல் நடத்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage