அம்பேத்கர்.. அம்பேத்கர். பேஷனுக்காக கோஷம் என பேசுவதா? அமித்ஷாவே மன்னிப்பு கேள்- காங்கிரஸ் ஆவேசம்

post-img
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அம்பேத்கர் குறித்த விமர்சனம் காங்கிரஸை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நேற்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பேசிய அமித்ஷா, அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என கோஷம் போடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது.. இதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என கிண்டலடித்திருந்தார். இதற்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அமித்ஷாவுக்கு எதிரான தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் முடிவடைந்தது. நாட்டின் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி இந்த விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் சாசனம் மீது ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதங்களுக்கு நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்திருந்தார். ராஜ்யசபாவில் நேற்று பேசிய அமித்ஷா, தற்போது அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது.. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைத்திருக்கும். இருந்த போதும் அம்பேத்கர் பெயரை காங்கிரஸ் கட்சியினர் இப்போது உச்சரிப்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டும் என்றார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மனுஸ்மிருதியை நம்புகிறவர்களுக்கு அம்பேத்கர் ஒவ்வாமையாகத்தான் இருப்பார் என சாடியிருந்தார். ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அண்ணல் அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்துவிட்டார். தேசியக் கொடிக்கும் அசோக சக்கரத்துக்கும் எதிராக பாஜகவின் முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் கருத்துகளையே அமித்ஷாவும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாட்டின் அரசியல் சாசனத்தை ஒழித்துக் கட்டிவிட்டு மனுஸ்மிருதியை திணிக்க முயல்கிறது பாஜக என்பதையே அமித்ஷாவின் பேச்சு வெளிப்படுத்தி இருக்கிறது. இப்படி ஒன்று நடந்துவிடவே கூடாது என்பதில்தான் அம்பேத்கர் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் இருந்தார். அம்பேத்கர் ஒன்றும் கடவுளுக்கும் குறைந்தவர் அல்ல.. பல கோடி தலித், பழங்குடிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் இறை தூதராகவே அம்பேத்கர் இருக்கிறார் என்றார். காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

Related Post