சென்னை: தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை கையாண்ட விதத்தையும், எடுத்த புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய குழு பாராட்டியுள்ளது.
2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் செந்னையில் இப்போது மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய குழு கூறியுள்ளது. அதுமட்டுமல்ல, இவ்வளவு பெரிய புயல், மழை, வெள்ளத்திலும் உயிர்சேதம் ஏதும் அதிகமில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தேதிகளில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. யாரும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இருளில் உணவின்றி, பாலின்றி பெரியோர் முதல் கைக்குழந்தைகள் வரை தவித்துப் போய்விட்டனர்.
சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. கார் முதல் வீட்டின் அடித்தளத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டதால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து தங்கள் வாழ்நாள் உழைப்பின் மூலம் சேர்த்த பொருட்களை இழந்தனர். இந்நிலையில் இப்போது சென்னையில் பழையபடி இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தச் சூழலில் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு சென்னை அனுப்பி வைத்தது.
அந்தக் குழுவில் ஏ.கே.சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, ரங்கநாத் ஆதம், விஜயகுமார், திமன்சிங் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இதனிடையே சென்னை வந்த மத்திய குழுவிடம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பாதிப்பு விவரங்களை எடுத்துரைத்தார். மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மத்திய குழுவை சில இடங்களுக்கு நேரிலேயே அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய குழுவினர், தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை கையாண்ட விதத்தை பாராட்டியுள்ளது. அதேபோல் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage