தோண்ட தோண்ட கிடைக்கும் தங்கம்.. ஆந்திரா பீச்சில் குவியும் மக்கள்.. ‛நிவர்’ புயலால் நடந்த மாற்றம்!

post-img
அமராவதி: தமிழகத்தின் தலைநகர் சென்னையை புரட்டிப்போட்ட ‛நிவார்’ புயல் ஆந்திர மக்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அதாவது நிவர் புயல் கரையை கடந்த பிறகு ஒரு கடற்கரையை தங்கம் கிடைக்கும் இடமாக மாற்றி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை?. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் நிவர் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஆந்திராவில் எந்த கடற்கரையில் தங்கம் கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். தங்கம் வாங்க நாம் அனைவரும் நகைக்கடைக்கு சென்று வருகிறோம். ஆனால் ஆந்திராவில் தங்கத்துக்காக பொதுமக்கள் கடற்கரைக்கு சென்று வருகின்றனர். இது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். அதோடு நம்ப முடியாத வகையிலும் இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. அந்த கடற்கரையின் பெயர் உப்பாடா. இந்த உப்பாடா பீச் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா வருவாய் கோட்டத்துக்குள் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் தான் பொதுமக்கள் தங்க வேட்டையை நடத்தி வருகின்றனர். தினமும் ஏராளமான மக்கள் அந்த கடற்கரையில் தங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது கடந்த 2020ம் ஆண்டில் நிவர் புயல் ஏற்பட்டது. நவம்பர் 23ம் தேதி முதல் நவம்பர் 27 ம் தேதி வரை இருந்தது. இந்த புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, சென்னை, ஆந்திரா கடல்கள் கொந்தளித்தன. அதோடு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தமிழகம் புயலால் பாதிக்கப்பட்ட அதேவேளையில் தான் உப்பாடா கரையில் தங்கம் இருப்பது தெரியவந்தது. அதாவது புயல் காரணமாக உப்பாடா கடற்கரையில் கடல்நீர் சீற்றத்துடன் காணப்பட்டு அடங்கியது. அப்போது கடற்கரையில் இருந்து தங்க மணிகள் மீனவர்களிடம் கிடைத்தது. இப்போது மீண்டும் உப்பாடா கடற்கரை மணலில் இருந்து தங்கதுகள்கள், சிறிய தங்க நகைகள் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் தற்போது உப்பாடா கடற்கரையில் தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாடா, சுரதாப்பேட்டை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வசிக்கும் மக்கள் மணலை தோண்டி சல்லடை போட்டு தங்கத்தை சேகரித்து வருகின்றனர். அதிர்ஷ்டம் இருப்பின் சிலருக்கு தங்கமணி, சிறிய தங்க துண்டுகள் கிடைக்கின்றன. சிலருக்கு நகைகளே கிடைக்கின்றன. அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் நாள் முழுதும் தேடியும் கூட தங்கம் என்பது எட்டாக்கனியாக மாறிவிடுகிறது. இந்த கடற்கரையில் தங்கம் எப்படி கிடைக்கிறது? என்று விசாரித்தபோது இதற்கு முன்பு கடல் சீற்றத்தில் வீடுகள், கோவில்கள் அடித்து செல்லப்பட்டன. அதில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்டவை கடலுக்குள் சென்றுள்ளன. இப்போது நிவர் புயலுக்கு பிறகு சூறாவளி காற்று மற்றும் புயல் காலங்களில் அலைகளில் மீண்டும் கரைக்கு அடித்து வருவதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இதற்கு முன்பு புதிதாக கோவில் மற்றும் வீடுகள் கட்டும்போது இந்த கடற்கரையில் வந்து தங்கத்தை புதைத்துவிட்டு பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்போது புதைக்கப்பட்ட தங்கம் தற்போது மக்கள் கைகளில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த உப்பாடா கடற்கரையை சுற்றுலாத்தலமாக மாற்ற துணை முதல்வர் பவன் கல்யாண் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் பொதுமக்கள் தங்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Post