சென்னை: கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டு தி-நகருக்கு குடியேறினார் சசிகலா. அதற்கு முதல் நாள் அதாவது 2011 டிசம்பர் 19ஆம் தேதி சசிகலாவை கட்சியில் இருந்தும் போயஸ் கார்டனில் இருந்தும் வெளியேற்றுவதாக அறிவித்திருந்தார் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. அதற்குப் பின்னணியில் ஒருவரின் பங்கு மிக முக்கியம் என சசிகலாவே கூறியுள்ளார். அப்போது ஆரம்பித்தது தான் சசிகலாவின் அரசியல் பின்னடைவு..
அதிமுக ஆட்சியில், தமிழக மக்கள் வீட்டில் பார்க்கிறார்களோ இல்லையோ அனைத்து தொலைக்காட்சி அலுவலகங்களிலும், செய்திதாள் நிறுவனங்களின் டெஸ்கிலும் ஜெயா பிளஸ் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்.
2011 ஆம் ஆண்டு முதல் அதற்குப் பிறகு ஜெயலலிதா மறைவும் வரை அதிமுக தொடர்பான அறிவிப்புகள் வேட்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம், அரசு அறிவிப்புகள் அந்த தொலைக்காட்சியில் தான் வெளியாகும்.
அப்படி 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தமிழகமே எதிர்பாராத ஒரு அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதாவின் நிழல் போலவும், தமிழக அரசின் நிழல் முதல்வராகவும் செயல்பட்டதாக கூறப்பட்ட சசிகலா கட்சியில் இருந்தும் போயஸ் கார்டனில் இருந்தும் வெளியேற்றப்பட்டதாக அதிரடி அறிவிப்பு வெளியானது. அது மட்டும் அல்லாமல் சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் தம்பி திவாகரன், சசிகலாவின் சகோதரியின் மகனான டிடிவி தினகரன்,பாஸ்கரன், சுதாகரன், சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷ், நடராஜனின் சகோதரரான ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.. இவர்களோடு கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என அறிக்கை வெளியிடப்பட்டது.
அடுத்த அடுத்த அறிவிப்புகளின் சசிகலாவின் ஆதரவாளர்களாக கருதப்பட்ட பழனிவேல், கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி, சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோரும் ஓரம் கட்டப்பட்ட பல ஆண்டுகள் ஜெயலலிதாவின் நிழலாக இருந்து கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்தி வந்த ஒரு குடும்பம் வெளியேற்றப்பட்டது தமிழக அரசியலில் பேசு பொருளானது. அதே நேரத்தில் அவர்களால் பாதிக்கப்பட்ட பலர் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதற்கெல்லாம் காரணம் என்ன என அப்போது 'பீக்கில்' இருந்த சில சீனியர்களிடம் விசாரித்த போது பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் சிலர் எப்போதும் தீவிர அரசியலில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவை பொருத்தவரை எந்தவிதமான செயல்பாடுகளாக இருந்தாலும் சசிகலா குடும்பத்தின் தயவு இருந்தால் தான் ஜெயலலிதாவின் பார்வைக்கு செல்லும் என்ற நிலை இருந்த காலம் அது..
அப்போது அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூடும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் தான் சசிகலா கட்சிகளிலிருந்து நீக்கப்பட்டார். சசிகலா நீக்கப்பட்ட அடுத்த நாளே நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பி.எச்.பாண்டியன் சசிகலாவின் நீக்கத்தை வரவேற்று பேசிய நிலையில், அதற்கு தனது புன்னகை ஒன்றையே பதிலாக கூறி இருந்தார் ஜெயலலிதா, இப்படியாக 19ஆம் தேதி போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா அடுத்த நாள் 20ஆம் தேதி தேதி தி நகர் இல்லத்திற்கு குடி பெயர்ந்தார்.
இந்த நிலையில் அந்த வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் நடிகரும் பிரபல அரசியல் விமர்சகராக கருதப்பட்ட சோ தான் என சசிகலாவே கூறியிருக்கிறார். 1991-96 ஆட்சிக்காலத்தில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுவது உண்டு. அப்போது சசிகலாவின் குடும்பத்தில் இருந்த சுதாகரனை தனது வளர்ப்பு மகனாக தத்தெடுத்து பிரம்மாண்ட திருமணத்தை நடத்தினார். அது 1996 தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வ காரணமாக இருந்தது. அப்போது சசிகலாவுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என சசிகலாவை வெளியேற்றினார் ஜெ. ஆனால் சில மாதங்களில் மீண்டும் அவர்கள் போயஸ் கார்டனுக்குள் அடி எடுத்து வைத்தார்.
2001 -2006, 2011-016 அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்ப ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் 2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜெயலலிதா முதல்வரான நிலையில் வழக்கு ஒன்று காரணமாக அவர் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்ட போது. அப்போது ஆட்சியைப் பிடிக்கும் சதியில் ஈடுபட்டதாக சசிகலா மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதன் காரணமாகவே அவர் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் சோ என சசிகலாவே கூறியிருக்கிறார்.
அதாவது ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரான சசிகலா கட்சி சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்தபோது என்னைப் பற்றி சிலர் தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர். அது தொடர்பாக சோ ஜெயலலிதாவிடம் பேசி அதற்கு பிறகு தான் தன்னை வெளியேற்றினார் என சசிகலா கூறியது குறிப்பிடத்தக்கது. இப்படியாக அதிமுகவினர் கொண்டாட்டம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை சிறிது நாட்களிலேயே தன் மீது தவறில்லை மீண்டும் போயஸ் கார்டனுக்கு வா என ஜெயலலிதா அழைத்தார். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போயஸ் கார்டனுக்கு திரும்பினேன். அப்போது எனது உறவினர்களுடன் எந்த தொடர்பும் கிடையாது என சசிகலா கடிதம் எழுதிக் கொடுத்ததாக தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி சோ இருந்தபோது அதிமுகவில் மிகுந்த நெருக்கடியில் இருந்த சசிகலா, ஜெயலிலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராகலாம் என ஆசைப்பட்டார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அவர் முதல்வராக முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் சசிகலா அந்த கட்சிக்குள் வர எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் 'சோவின் சீடர்' ஒருவர் மறைமுகமாக இன்று வரை காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.