சென்னை: அதிமுக கூட்டணி எப்படி அமையும்? என்று சென்னையில் இன்று நடந்த அந்த கட்சியின் செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் சிவி சண்முகம் உரக்க பேசினார். இதை கேட்ட கட்சியினர் உற்சாகமாக கைத்தட்டினர்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சியின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழுவை சேர்ந்தவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என்று 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் தலைமையில் பொதுக்குழு தொடங்கியது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமி சிறப்பு உரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் சிவி சண்முகம் பேசினார். அப்போது அவர் அதிமுக கூட்டணி எப்படி அமையும்? என்பது பற்றி சிவி சண்முகம் பேசினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கூட்டணி.. எல்லோரும் கேட்பது கூட்டணி. நான் கேட்கிறேன். 2001ல் தேர்தலுக்கு 3 மாதம் முன்பு வரை கூட்டணி வந்ததா?. கூட்டணி எப்போது வந்தது? தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் கூட்டணி அமைந்தது. இவர் வருவாரா? அவர் வருவாரா? என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அனைவரும் வந்தார்கள். மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. மிகப்பெரிய வெற்றியை ஜெயலலிதா பெற்று தந்தார்கள்.
2011ல் தேர்தல் கூட்டணி எப்போது அமைந்தது? தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு தான் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. ஆகவே கூட்டணி வரும். அதை பொதுச்செயலாளர் பார்த்து கொள்வார்கள். நல்ல கூட்டணி அமையும். நாம கூட்டணி அமைக்கிறோமோ இல்லையோ.. அவர் அமைத்து கொடுத்து விடுவார். ஸ்டாலினே கூட்டணியை அமைத்து கொடுத்துவிடுவார். இதனால் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அதிமுக அமைத்து தரும்.
இது சரித்திரம். எப்போதெல்லாம் அதிமுக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைகிறதோ.. அடுத்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்று இருக்கிறோம். அந்த நம்பிக்கையோடு, அந்த எழுச்சியோடு, அந்த உற்சாகத்தோடு, நீங்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றி ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் அமைக்க வேண்டும்'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.
சிவி சண்முகத்தின் இந்த பேச்சை உன்னிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கவனித்த நிலையில் செயற்குழு, பொதுக்குழுவுக்கு வந்த கட்சியினர் உற்சாகமாக கைத்தட்டினர்.