‘கடவுளே அஜித்தே’ கோஷம்! வந்து விழுந்த கேள்வி.. சற்றும் யோசிக்காமல் டிடிவி தினகரன் சொன்ன பதில்! அடடே

post-img
மதுரை: சமீப காலங்களாகவே இணையத்தில் 'க...... அஜித்தே' என்ற கோஷம் டிரெண்டானது. அப்படி யாரும் கோஷமிட வேண்டாம் என்று அஜித் சொல்லும் அளவுக்கு எங்குப் பார்த்தாலும் இது டிரெண்டிங் ஆனது. அமமுக தலைவர் டிடிவி தினகரன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட 'க...... அஜித்தே' என்று அங்கிருந்த மாணவர்கள் சிலர் கோஷமிட்டது பேசுபொருள் ஆனது. இதற்கிடையே டிடிவி தினகரன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பொதுவாக இணையத்தில் எப்போது எது டிரெண்ட் ஆகும் என்றே தெரியாது.. திடீர் திடீரென சம்பந்தமே இல்லாத விஷயங்கள் கூட டிரெண்டாகும். அப்படிதான் கடந்த சில காலமாக 'க...... அஜித்தே' என்ற கோஷம் டிரெண்டாகி வந்தது. அஜித்: நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் அன்பின் வெளிப்படையாக இந்த கோஷத்தை எழுப்பி வந்தனர். சமீபத்தில் டிடிவி தினகரன் திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்த நிலையில், அப்போது அவர் பேச வரும்போது அங்கிருந்த மாணவர்கள் 'க...... அஜித்தே' எனக் கோஷமிட்டனர். முதலில் டிடிவி தினகரனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தனது உதவியாளர்களிடம் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இந்தச் சம்பவம் பேசுபொருள் ஆனது. அதைத் தொடர்ந்தே அஜித் குமார் தரப்பில் இருந்து இதுபோல யாரும் கோஷமிட வேண்டாம் என்ற அறிவிப்பு வந்தது. அதன் பிறகே இந்தச் சம்பவம் குறைந்து இருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன்: இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "திருப்பூரில் பள்ளி விழாவுக்குச் சென்று இருந்தேன். மாரத்தான் போட்டியில் கட்சி சார்பாகப் பரிசு கொடுக்க சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முதலில் மேடையில் பேசிவிட்டு பரிசு கொடுக்கச் சொன்னார்கள். பள்ளி மாணவர்கள் தான் அங்கே இருந்தனர். நான் பேசத் தொடங்கும் போது திடீரென ஏதோ கோஷமிடத் தொடங்கினர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனது காதில் விழவில்லை. இதனால் எனது நிர்வாகிகளிடம் இது குறித்துக் கேட்டேன். அவர்கள்தான் இது "கடவுளே.. அஜித்" என்ற கோஷமிடுகின்றனர் என்றும் இதுவே இப்போது டிரெண்டாகியுள்ளது என்றும் சொன்னார்கள். நானும் சரி ஓகே என விட்டுவிட்டேன். நானும் அஜித் ரசிகர்தான்: மாணவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்ட உடன் அவர்கள் அமைதியாகிவிட்டார்கள். நடந்தது அவ்வளவு தான். இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசத் தொடங்கினார்கள். நான் அதிர்ச்சி அடைந்ததாக எல்லாம் சொன்னார்கள். அதில் நான் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது. நானும் கூட அஜித் ரசிகர்தான். எனக்கும் அவரை பிடிக்கும். பல குழந்தைகளுக்கு நான் அஜித் குமார் என்றே பெயரை வைத்துள்ளேன். ஒரு நடிகராக அஜித்தை எனக்குப் பிடிக்கும் என்பதை நான் இதற்கு முன்பே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். ஆனால், பள்ளியில் நடந்தது அவ்வளவு தான்" என்றார். விஜய் அரசியல்: மேலும், விஜயின் அரசியல் குறித்து இப்போதைக்கு விமர்சனம் சொல்வது நாகரீகமாக இருக்காது என்று குறிப்பிட்ட அவர் விஜய் உச்சபட்ச நடிகராக இருந்து விட்டு தற்போது அரசியலுக்கு வந்து இருக்கிறார், அவருக்கு இளைஞர்கள் எந்தளவுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதைத் தேர்தலுக்கு பிறகே கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Post