சென்னை: லண்டனுக்கு இந்தியாவில் இருந்து மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு படிக்க சென்றது 11 பேர். அதில் அண்ணாமலையை மட்டும் பெரிதுபடுத்துவது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 இடங்களில் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெரும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கோடங்கிபட்டியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் மாவட்டத்திற்கு புதிய வேளாண் கல்லூரி, ரூ. 3000 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
200 ஏக்கரில் சிப்காட், தொழில் பூங்கா அமைய உள்ளது. கோடங்கிபட்டியில் உயர்மட்ட பாலம் வர உள்ளது.
மின்சாரம் கொள்முதல் விசாரணை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். ஆனால் அந்த அறிக்கையை படித்த பின்னும் அதனை புரிந்து கொள்ளாமல் ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தெரிந்தவர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. ஜாமீன் அமைச்சர் என சொல்லி இருக்கிறார். பாஜகவில் எத்தனை பேர் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
7 ரூபாய் 1 காசு என்பது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தடை ஆணை கேட்டோம். உச்ச நீதிமன்றம் தடையாணை வழங்கவில்லை. அதனால் நிதி விடுவிக்கப்பட்டது. ஏதோ எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
யூனிட்டுக்கு 2 ரூபாய் 61 பைசா என்ற அளவில் இந்தியாவிலேயே மிகக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்வது தமிழ்நாடு அரசுதான்.இந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் அதானி குடும்பத்தோடு எந்த தொடர்பும், தொழில் ரீதியாக தொடர்பும் வைக்கவில்லை என தெளிவாக சொல்லி உள்ளோம். பூதக் கண்ணாடி போட்டு சல்லடை போட்டு தேடி திமுக மீது ஏதேனும் குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பொய்யான அறிக்கை வெளியிடுகின்றனர்.
பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆண்டுதோறும் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். ஊடகங்கள் அது குறித்து பேசுவதில்லை. ஆனால் ஒரு நபரைப் பற்றி மட்டும் செய்தி வெளியிடுகின்றனர். மத்திய அரசு தேர்வு செய்து லண்டனுக்கு அனுப்பிய 11 நபர்களில் அண்ணாமலையும் ஒருவர். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஐஏஎஸ்ஸும் சென்றார். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு அண்ணாமலை போனதை மட்டும் வரிந்து கட்டி செய்தி போட்டார்கள். அவரை மட்டும் பெரிதுபடுத்துவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக பாஜக மநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல், இரவு பகல் என கால நேரம் பார்க்காமல், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு சங்க காலப் பாடல் வரிகளைப் பாடி சமூக வலைதளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமீன் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தற்போதுதான் தனது துறைகள் குறித்த ஞாபகம் வந்திருக்கிறது.
திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, வழக்குத் தொடருவோம் என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில் தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்திருக்கிறார். அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறும் அமைச்சர் செந்தில்பாலாஜி, தனது வார்த்தை விளையாட்டின் மூலம் அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார்." என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage