சென்னை: சமீபத்தில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக விஜய் உடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த ஆதவ், தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார். இந்த கருத்துகள் அரசியல் தளத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்திக்கிறார்.
திமுக ஆட்சிக்கு எதிர்க்கட்சிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை காட்டிலும், கூட்டணி கட்சிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்தான் சமீப காலமாக அதிகமாக இருக்கின்றன. அதிலும் விசிகவால் கிளம்பிய பஞ்சாயத்துகள் கொஞ்சம் நஞ்சமல்ல. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டபோது விசிகவின் நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, குண்டு ஒன்றை வீசியெறிந்தார். சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் துணை முதல்வர் ஆகும் போது தீவிர அரசியலுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் திருமாவளவன் துணை முதல்வராக ஆகக்கூடாதா? ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேசியிருந்தார்.
இவர் பேசியது பிரச்னைக்கு காரணம் என்றாலும் கூட, திருமாவளவன் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல் கடந்து சென்றது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதை போல ஆகிவிட்டது. போதாத குறைக்கு, "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை விசிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது" என்றும் திருமா, ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு பயங்கரமாக சப்போர்ட் கொடுத்திருந்தார். இவை எல்லாம் உடன் பிறப்புகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தின.
வழக்கமாக சில அரசியல் பிரச்னைகள், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் லைம்லைட்டில் இருந்து காணாமல் போய்விடும். ஆனால், ஆதவ் அர்ஜுனா பஞ்சாயத்து அப்படி ஆகவில்லை. இந்நிலையில், விஜய் உடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசியிருந்த ஆதவ், தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வெடியை கொளுத்தி போட்டிருந்தார். ஆனால் உருண்டது என்னவோ திருமாவின் தலைதான்.
ஆதவ் பேசியது தவறுதான். அது அவரது தனிப்பட்ட கருத்து.. கட்சியின் கருத்து அல்ல என்று திருமா விளக்கம் கொடுத்தார். ஆனால் ஆதவ் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அவரின் கருத்தை விசிக ஏற்றுக்கொள்வதை போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சலசலப்புகளுக்கு இடையேதான் இன்று முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் நேரில் சந்திக்கிறார். காலை 9 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெறும் சந்திப்பில், விசிக சார்பில் புயல் வெள்ள நிவாரண நிதியை திருமாவளவன் முதல்வரிடம் வழங்குகிறார். விசிக சார்பில் எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளமும், எம்பிக்களின் 2 மாத சம்பளமும் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage