தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யானை தெய்வானை தாக்கி பாகன் உதயகுமார் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இனி யாரையும் தாக்குவாயா? என்று வேடிக்கையாக பாகன் கேட்டதற்கு, மாட்டேன் என்பது போல் தலையை ஆட்டியது யானை தெய்வானை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற 26 வயது மதிக்கத்தக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் உதயகுமார் என்பவர் பராமரித்து வருகிறார். இதற்காக ராஜகோபுரத்திற்கு அருகிலேயே சிறிய குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யானை கொட்டகை அருகே நின்ற போது யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றார். அப்போது அவரது உறவினரும் முன்னாள் ராணுவ வீரருமான கன்னியாகுமரியை சேர்ந்த சிசுபாலன் என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென யானை அவர்களை மிதித்துக் தாக்கியது.
இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உதயகுமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் இழந்தார். யானை மிதித்ததால் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீண்ட நேரம் யானைக்கு அருகே நின்றதாலும் அதனை தொட்டு செல்ஃபி எடுக்கு முயன்றதால் தன்னை வேறு யாரோ தொடுவதாக உணர்ந்து தெய்வானை பாகன் உதயகுமாரையும் சிசுபாலனையும் மிதித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதனால் பக்தர்கள் அச்சமடைந்த நிலையில், யானையும் சோகத்தில் மூழ்கியதோடு, உணவு எடுத்துக் கொள்ளாமல் தவித்தது. தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் யானையை கண்காணித்து வந்தனர்.
மேலும் யானையின் பாகன்களான ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோர் யானையை தினமும் குளிக்கச் செய்து உணவு வழங்கி பராமரித்து வந்தனர். தொடர்ந்து யானைக்கு அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு காரணமாக யானை தெய்வானை இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதற்கிடையில் கடந்த வாரத்தில் இருந்து யானை சாதாரண நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யானை தினமும் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே குளிக்க வைக்கப்பட்டு யானை பாகன் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் பார்த்து ஆய்வு செய்து விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் யானையை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தனர். வன கால்நடை மருத்துவர் மனோகரன், ஆறுமுகநேரி கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார், வன கால்நடை ஆய்வாளர் அர்னால்ட், வனவர் ரகு ஆகியோர் யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். அப்போது யானைக்கு அவர்கள் பழங்கள் கொடுத்தனர். அதை வாங்கி சாப்பிட்ட யானை உற்சாகமானது.
இதற்கிடையில் இனி யாரையும் தாக்குவாயா? என்று வேடிக்கையாக பாகன் கேட்டதற்கு மாட்டேன் என்பது போல் தலையை ஆட்டியது. யானையை ஆய்வு செய்த வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் யானை சகஜ நிலையில் தான் உள்ளது. எனவே யானையை எப்போதும் போல் தினமும் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம் என பரிந்துரை செய்தனர். முதற்கட்டமாக பக்தர்கள் குறைவாக உள்ள சமயங்களில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது நலம் என்று கூறினர்.
அதைத் தொடர்ந்து யானை தினமும் குளிக்கும் சரவண பொய்கை பகுதியில் யானையை பராமரிக்க குடில் எதுவும் அமைக்கவில்லை. குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள இந்த சரவண பொய்கை உள்ள பகுதி மிகவும் விஸ்தாரமான பகுதியாகும். எனவே அந்த இடத்தில் யானை பராமரிக்க ஒரு குடில் அமைத்தால் யானை இயற்கை சூழலில் இருக்க மிகவும் வாய்ப்பாக இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் பரிந்துரை செய்துள்ளனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage