எமர்ஜென்சியில் ஒட்டுமொத்த தேசத்தையே சிறைக் கூடமாக மாற்றிய காங்கிரஸ்- லோக்சபாவில் மோடி காட்டம்!

post-img
டெல்லி: 1975-ல் காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்திய எமர்ஜென்சியில் (அவசர நிலை பிரகடனம்) ஒட்டுமொத்த இந்தியாவுமே சிறைக் கூடமாக மாற்றப்பட்ட கொடுமை நிகழ்ந்தது என்று லோக்சபாவில் அரசியல் சாசனத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த பிரதமர் மோடி சாடினார். மேலும் அரசியல் சாசனத்துக்கு எமர்ஜென்சி காலத்தில் முடிவுரை எழுதியது காங்கிரஸ் என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசியதாவது: அரசியல் சாசனத்தின் மீது ஒரு குடும்பம்தான் தாக்குதல் நடத்தியது. தமது அரசியல் லாபங்களுக்காக அரசியல் சாசனத்தைத் திருத்தங்களை நியாயப்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு. கொல்லைப்புறம் வழியாக அரசியல் சாசனத் திருத்தங்களை மேற்கொண்டவர் ஜஹவர்லால் நேரு. இது தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியவரும் நேருதான். கடந்த 60 ஆண்டுகளில் அரசியல் சாசனம் 75 முறை திருத்தப்பட்டுள்ளது. நேருவின் மகள் இந்திரா காந்தி தமது தந்தையின் வழியில் அரசியல் சாசனத்தை நிர்மூலமாக்கினார். நமது நாட்டின் அரசியல் சாசனம் 1950-ல் நடைமுறைப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த தருணம். 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி எனும் அவசரநிலைப் பிரகடனம் நாட்டில் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்டது. அரசியல் சாசனம் நமக்கு வழங்கிய உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. ஒட்டுமொத்த தேசமுமே பெரும் சிறைக் கூடமாக மாற்றப்பட்டது. இந்தியாவின் வரலாற்றில் அந்த எமர்ஜென்சி- அவசரநிலை காலம் கறுப்பு அத்தியாயம். காங்கிரஸ் சகாப்தத்தின் கறை. காங்கிரஸ் கரங்களில் படிந்திருக்கும் கறையை எப்போதும் கழுவிவிட முடியாது. நாட்டின் அனைத்து ஊடகங்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டிருந்தது. ஜனநாயகத்தை எமர்ஜென்சி மூலம் நெறித்தது காங்கிரஸ்தான். இந்த சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் பல தலைவர்கள் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்தான். ஆனால் இன்று நிர்பந்தங்களுக்காக எதிர்க்கட்சிகளோடு இணைந்திருக்கின்றனர். இன்றைக்கு நான் இந்த சபையில் நிற்பதற்கு காரணம் அரசியல் சாசனம்தான். இந்த அரசியல் சாசனத்தால்தான் இன்று நாம் அனைவரும் இந்த சபையில் கூடியிருக்கிறோம். ஷாபானு வழக்கு விவகாரத்தில் இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அரசியல் சாசனத்துக்கு மாறுபட்ட வகையில் செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் பிரதமர் அலுவலகத்துக்கும் மேலான ஒன்றாக தேசிய ஆலோசனைக் கவுன்சில் உருவாக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ்தான் சர்ச்சைக்குரிய 35 ஏ சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டுக் கொண்டு வந்தது. நாட்டின் ஒற்றுமைக்கு தடையாக இருந்ததாலேயே அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு குழிதோண்டி புதைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Post