"ஆம்பள யாருமே இல்லையா?” பெண்களிடம் பாமக எம்.எல்.ஏ அருள் அநாகரீக பேச்சு.. கடும் கொந்தளிப்பு!

post-img
சேலம்: சேலம் அருகே பெண்களிடம் பாமக எம்.எல்.ஏ அருள், அநாகரிகமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக எம்.எல்.ஏ அருள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சேலம் ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி பகுதியில் பூட்டப்பட்ட கோவில் ஒன்றை திறப்பதற்கான பேச்சுவார்த்தையின்போது, பெண்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்து, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், "ஆம்பள யாருமே இல்லையா?" எனத் தொடங்கி அநாகரிகமாகப் பேசி இருக்கிறார். சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்து நாயக்கன்பட்டியில் அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இரு தரப்பினரையும் அழைத்து ஓமலூர் தாசில்தார் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இரு தரப்பினரும், கோவிலை திறக்க வேண்டும் என விரும்பியதால், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், கோயிலை திறந்து பூஜை நடத்துவது குறித்து பேச்சு வார்த்தைக்காக அங்கு நேற்று சென்றுள்ளார். அப்போது ஒரு தரப்பில் இருந்து ஆண்களும், மற்றொரு தரப்பில் இருந்து பெண்களும் மட்டும் வந்துள்ளனர். அப்போது, எம்.எல்.ஏ அருள், இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் கோவிலை நீங்கதான் திறந்து வைக்கணும் என பேசிக்கொண்டே இருந்ததால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாமக எம்.எல்.ஏ அருள், "ஆம்பள யாருமே இல்லையா?" எனத் தொடங்கி தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். ஆவேசமாக பேசும் எம்.எல்.ஏ அருளை பார்த்து, பெண்கள் கையெடுத்துக் கும்பிடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாமக எம்.எல்.ஏ அருளின் இந்த அநாகரிகமான செயல்பாட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Post