ஓராண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட `ஆஹா’ தமிழ் ஓ.டி.டி தளம், திடீரென்று தனது சேவையை நிறுத்தப்போகிறது என்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இது குறித்த உண்மை என்ன?
கொரோனா ஊரடங்கின்போது வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்த மக்களுக்குப் பொழுதுபோக்கியதே ஓ.டி.டி தளங்கள்தான். நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் என உலகளவிலான ஓ.டி.டி தளங்களுடன் உள்ளூர் ஆட்டக்காரர்கள் பலரும் போட்டியிட்டனர். அதில் ஒன்றுதான் தெலுங்கின் ஆஹா ஓ.டி.டி தளம். கடந்த 2020-ம் ஆண்டு தன் மகன் அல்லு அர்ஜுனை பிராண்ட் அம்பாசிடராக்கி மை ஹோம் நிறுவனத்துடன் இணைந்து ஆஹா ஓ.டி.டி-யின் சேவையைத் தொடக்கினார் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த். இதன் தமிழ்த் தளத்தின் அம்பாசிடர்களாக சிலம்பரசனும் அனிருத்தும் நியமிக்கப்பட்டனர்.
ஆஹா தமிழ் ஓ.டி.டி-யின் தொடக்க விழாவின் போது, "நான் படித்ததெல்லாம் சென்னையில்தான். சாதாரணப் பள்ளியில் படித்துவிட்டு நந்தனம் ஆர்ட்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தேன். அதன்பிறகு, சென்னையிலேயே சட்டப் படிப்பைப் படித்தேன். ஆனால், படிப்பைத் தொடர முடியவில்லை. ‘ஆஹா தமிழ்’ மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேன். என் வீட்டுக்குத் திரும்ப வந்தது போன்ற உணர்வு" என்று உருக்கமாகப் பேசினார் அல்லு அரவிந்த்.
கடந்த 2020-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் ஆஹா ஓ.டி.டி-யை ஆரம்பித்தபோது, ஒரு வருடத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றது. தற்போது, அந்த எண்ணிக்கை 18 லட்சம் சப்ஸ்கிரைபர்களாக உயர்ந்துள்ளது என்கிறார்கள். தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது சேவையைத் தொடங்கியது.
தொடக்கத்தின்போது, கவின் நடித்த 'ஆகாஷ்வாணி' வெப்சீரிஸ், திரையரங்க ஓட்டத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி, ஹரிகிருஷ்ணன் நடித்த 'ரைட்டர்' படம் போன்றவை ஆஹா ஓ.டி.டி தளத்தில் கவனிக்க வைத்தன.
இதைத் தொடர்ந்து, 'பயணிகள் கவனிக்கவும்', 'போத்தனூர் தபால் நிலையம்', 'ரத்தசாட்சி', 'உடன்பால்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அதேபோல, 'பேட்டைக்காளி' போன்ற மண்ணின் பெருமையைச் சொல்லும் வெப்சீரிஸை வெளியிட, அது விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'செல்ஃபி', 'ஐங்கரன்', 'மாமனிதன்' 'சர்தார்' போன்ற படங்களையும் வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், ஆஹா ஓ.டி.டி தளம், தனது சேவையை நிறுத்தப்போகிறது என திடீரென்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ’இந்தத் தகவல்கள் உண்மைதானா?’ என்பதை அறிய ஆஹா தமிழின் துணைத்தலைவர் கவிதாவைத் தொடர்புகொண்டு பேசினேன்.
"தெலுங்கில் ஆஹா ஓ.டி.டி தளம் மிகவும் சிறப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. நம்பர் ஒன் இடத்தையும் வகிக்கிறது. தெலுங்கைப் போலவே, தமிழ் ஓ.டி.டி தளத்தை மேம்படுத்தவும் அதிக படங்கள், நிகழ்ச்சிகளைக் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளோம். அதற்காக, பெரிய முதலீட்டாளர்கள் தேடலிலும் ஈடுபட்டுள்ளோம். தரமான, வித்தியாசமான, மண்சார்ந்த கதைகள் என நல்ல படங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதுதான் எங்கள் நோக்கம். அதனால்தான், குறைவான படங்களாக இருந்தாலும் நிதானமாக நல்ல படங்களாக வெளியிட்டு வருகிறோம். அடுத்தமாதம்கூட, ஒரு வெப் சீரிஸ் வரவுள்ளது. மற்ற ஓ.டி.டி தளங்கள் புதுமுகங்களுக்கோ, புது இயக்குநர்களுக்கோ வாய்ப்பு கொடுப்பதில்லை. ஆனால், ஆஹா தமிழ் இளம் இயக்குநர்கள் சாதிப்பதற்காக தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துவருகிறது.
இதற்காகவே, எங்கள் அலுவலகத்திற்கு வரும் எல்லா இயக்குநர்களையும் சந்திக்கிறோம், கதை கேட்கிறோம். இதுபோல், எங்கும் பார்க்க முடியாது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பெருமை உள்ளது. ஆஹா தமிழ் ஆரம்பித்ததிலிருந்து இப்போதுவரை அனைத்து மண்டலங்களையும் உள்ளடக்கிய கதைகளைத் தேர்வு செய்து மக்களை மகிழ்விக்கிறோம். மற்ற ஓ.டி.டி தளங்களைவிட ஆஹா தமிழில் கட்டாயம் வாரந்தோறும் தமிழ்ப் படங்களை வெளியிடுகிறோம். டாப் 5 ஓ.டி.டி தளங்கள் வரிசையில், ஆஹா தமிழ் நல்ல இடத்தில்தான் இருக்கிறது. அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமான கதைகளைத் திட்டமிட்டுள்ளோம்.
'ரத்தசாட்சி', 'பேட்டைக்காளி' நல்ல வரவேற்பைப் பெற்ற சுவாரஸ்யமான கதைகள். இப்போதெல்லாம் அடிக்கடி டிரெண்ட் மாறிக்கொண்டே வருகிறது. அதற்கேற்றவாறு, செயல்திட்டங்களை மாற்றி அமைக்க ஆஹா தமிழின் மொத்த டீமும் உழைத்துவருகிறது. உண்மை நிலவரம் இப்படியிருக்கும்போது ஆஹா தமிழ் தனது சேவையை நிறுத்தபோகிறது, நிர்வாகத்தினர் அனைவரையும் மாற்றிவிட்டார்கள் போன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள், எதற்காகப் பரப்புகிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பதெல்லாம் தெரியவில்லை. இது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். இதுபோன்ற வதந்திகளை சந்தாதாரர்களும் பொதுமக்களும் நம்பவேண்டாம்" என்கிறார் கோரிக்கையாக.