தூத்துக்குடி: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சொல்வதுபோல 200 தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். நானும் இறுமாப்போடு சொல்கிறேன் கட்டுப்பாடோடு பணியாற்றினால் 200 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. விஜய் அரசியல் கட்சி பிரவேஷம் தமிழ்நாடு அரசியல் அனல் பறந்து கொண்டிருக்கிறது. 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என எட்டு கால் பாய்ச்சலில் திமுக செயல்பட்டு வருவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாட்டிலேயே திமுகவையும், பாஜகவையும் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார். அதேசமயம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற போகிறபோக்கில் ஒரு வெடிகுண்டையும் வீசினார். அரசியல் களத்தில் அனல் பறக்கும் விவாதமாக இப்பிரச்னை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் விஜயும், திருமாவளவனும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுதொடர்பான பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மத்தியில் இருக்கின்ற ஒன்றிய அரசு மணிப்பூர் சம்பவம் பற்றி கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அவங்க தான் அப்படியென்றால், இங்க இருக்கிற தமிழக அரசு அதற்கு மேலாக இருக்கிறது. வேங்கை வயல் சம்பவத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை.
வெள்ளப் பாதிப்பின் போது சம்பிரதாயத்துக்கு ட்வீட் போடுவது, அறிக்கை விடுவது, வெள்ளத்தில் இறங்கி போட்டோ எடுத்துக் கொள்வது என்று இல்லாமல், உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் எகத்தாளமாக கூட்டடணி கட்சிகள் இருக்கிறது என 200 தொகுதிகளில் வெல்வோம் என்று பேசுகிறார்கள். வரும் 2026 தேர்தலில் நீங்க நம்பிய கூட்டணி கணக்குகள் உங்களுக்கே மைனஸ் ஆக மாறும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், நானும் இருமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளிலும் நிச்சயமாக திமுக வெற்றி பெறும் என்று கனிமொழி பேசியுள்ளார்.
திமுக மாநில ஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்செந்தூர் ஐஎம்ஏ மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், கனிமொழி எம்பி பேசியதாவது: 2026 தேர்தல் வெற்றி என்பது உங்களின் கரங்களில் இருக்கிறது என்ற அந்த கட்டுப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சொல்வதுபோல 200 தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். நானும் இறுமாப்போடு சொல்கிறேன் வெற்றி நிச்சயம், வெற்றி நிச்சயம் என்று பேசினார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage