சென்னை: தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் நடிகர் விஜய்க்கு நெருக்கமான இரண்டு பேர் முக்கியமான ஆலோசனைகள் சிலவற்றை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விஜயிடம் 2 பேர் வந்து முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்களாம்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சி 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. 2026 சட்டசபைக்கு முன்பாக தேர்தல் ரீதியாக கட்சியை தயார் செய்ய விஜய் முயன்று வருகிறார். இதற்கான சில திட்டங்களை அவர் வகுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1. முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை த.வெ.க. தலைவர் விஜய்யும் உன்னிப்பாக கவனித்துள்ளார். இதுகுறித்து, மாநில நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார். எனக்கு கிடைத்த தகவலின் படி, நம் கட்சியினரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட ஆளும் கட்சி திட்டமிடுவதாக தெரிகிறது. அதனால், பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள கட்சியினருக்கு அறிவுறுத்துங்கள். அடுத்து, புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களில் யாரெல்லாம் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை பெறாமல் இருக்கிறார்களோ அவர்களை இந்த திருத்தப் பணிகளை பயன்படுத்திக்கொள்ள அட்வைஸ் பண்ணுங்கள்.
அடுத்த வருடம் எல்லோரும் பட்டியலில் இணைய வேண்டும். நம்முடைய கட்சியில் இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்க வாய்ப்புகள் குறைவு. இதனால் உடனே அவர்களை வாக்காளர் அடையாள அட்டை பெற ஆலோசனை வழங்குங்கள் என்று விஜய் கூறி இருக்கிறாராம்.
2.தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் அடுத்த வருடம் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதேபோல் விஜயும் திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
3. விஜயுடன் இப்போது அரசியல் ஆலோசகர் ஒருவர் இருக்கிறார். அவர் சொல்லும் அரசியல் திட்டங்களை வைத்தே விஜய் காய் நகர்த்தி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் நடிகர் விஜய்க்கு நெருக்கமான இரண்டு பேர் முக்கியமான ஆலோசனைகள் சிலவற்றை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி.. நம்முடைய கட்சியில் இணைய ஒருவர் முயன்று கொண்டு இருக்கிறார். கட்சிக்குள் வரவும்.. முக்கிய பொறுப்பை பெறவும் முயல்கிறார்.
அதை விடக்கூடாது. அவர் உள்ளே வந்தால்.. நமக்குத்தான் சிக்கல். ஏற்கனவே அவர் மீது அமலாக்கத்துறை கண் உள்ளது. அதோடு அவர் மீது வேறு சில புகார்கள் உள்ளன. அவர் வந்தால் கட்சிக்கு நிதி ரீதியாக பலம்தான். ஆனால் நிர்வாக ரீதியாக நமக்கு எதிராக செயல்படுவார். நம்முடைய கட்டுப்பாடுகளை அவர் கேட்க மாட்டார். அவரின் வருகை கட்சிக்கே சிக்கலாகும் என்று பனையூர் பங்களாவில் விஜய்க்கு நெருக்கமான 2 பேர் அவரிடம் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.