உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
பொன்முடி வீட்டில் பரபர ரெய்டு: அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, பொன்முடியின் மகன் எம்.பி கவுதசிகாமணி வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
என்ன வழக்கு?: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு ரூ.28 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான பொன்.கௌதமசிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பொன்முடி தமது மகன் கவுதமசிகாமணியுடன் தலைமறைவானார். இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தனர். ஆனால் முன் ஜாமீன் கிடைக்காததால் பொன்முடி கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகன் கவுதம சிகாமணிஉள்ளிட்ட 3 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
செம்மண் குவாரி வழக்கு: இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 17 (இன்றைக்கு) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
இதற்கிடையே தங்கள் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை தொடர அனுமதி அளித்து அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில் தான் தற்போது அமைச்சர் பொன்முடி, எம்.பி கௌதமசிகாமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் பொன்முடி உள்ளிட்டோர் மீது ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.