கார் கண்ணாடியை உடைத்து 70 லட்சம் ரூபாய் பணம் திருட்டு..!

post-img

கோவையில்  உணவகம் வாசலில் நிறுத்தி வைத்திருந்த ரியல் எஸ்டேட் அதிபர் கார் கண்ணாடியை உடைத்து 70 லட்ச ரூபாய்  திருடி சென்ற சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையை அடுத்த   எஸ்.எஸ்.குளம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (51). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று இரவு தொழில் ரீதியாக கண்ணன் என்பவருக்கு பணம் கொடுக்க 70 லட்ச ரூபாய் பணத்துடன் தனது காரில் அவினாசி சாலை சிட்ரா அருகே வந்துள்ளார். கண்ணன் வருவதற்கு தாமதமாகும் என்பதால் காரினை அன்னப்பூர்னா உணவகத்தில் நிறுத்திவிட்டு இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்த போது அவரது காரின்  கண்ணாடி உடைத்திருப்பதை பார்த்து  அதிர்ச்சியடைந்து காருக்குள் பார்த்த போது, காரில் வைத்திருந்த 70 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பீளமேடு காவல் துறையில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கார் கண்ணாடியை உடைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் எப்போதும் இருக்கும் பகுதியில் 70 லட்சம்  பணம் கார் கண்ணாடியை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Related Post