ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்.. குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியினர் கண்ணீர் மல்க விடைகொடுத்தனர்!

post-img
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மணப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலை காலமானார். நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலை திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாசக்கருவி மற்றும் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்த தகவல் அறிந்ததும், மருத்துவமனை முன்பு காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரள தொடங்கினர். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து பகல் 1 மணியளவில் மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஈவிகேஸ் இளங்கோவன் உடல் எடுத்து செல்லப்பட்டது. அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஈவிகேஸ் இளங்கோவன் உடலுக்கு நேரில் சென்று முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் குமார் உள்ளிடோர் இன்று சென்னைக்கு வருகை தந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணி வரை மணப்பாக்கம் இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது இதையடுத்து மணப்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முகலிவாக்கம் மின்மயானத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Related Post